கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று(ஜூன் 2) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், மருத்துவ வல்லுநர் குழுவைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு அலுவலர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறப்பு மருத்துவ குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும்,தடுப்பூசியை விரைந்து செலுத்துவது குறித்தும், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கினால் கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும்.
தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், ஜூன் 7 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு முடிவடைய இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. இந்த நாட்களில் எந்த அளவுக்கு கொரோனா தொற்று குறைகிறது என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பதும் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகளை அதிகப்படுத்தி ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
�,”