அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியும் அதற்கு அமைச்சர்கள் அளித்து வரும் பதிலும் கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் சொல்லும் கருத்துகள் இப்போது தேவையற்றவை. அவர் உங்களை முதல்வர் வேட்பாளர் என்று இப்போதே கூறுகிறார். இதுகுறித்து நீங்கள்தான் வெளிப்படையாக பேச வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தான் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று ஆகஸ்டு 13 அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்திய பிறகு, “சட்டமன்றத் தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும்” என்று அறிவித்தார் கே.பி.முனுசாமி.
இந்த ஆலோசனை முடிந்தபிறகு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் அலைபேசி மூலம் பேசிய கே.பி.முனுசாமி, ‘அமைச்சர் என்ற முறையில் தாங்கள் தங்கள் துறை பற்றி பேசுங்கள். மாவட்ட விவகாரங்கள் பற்றி பேசுங்கள். யார் முதல்வர் என்பது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டதாக தலைமைக் கழக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
இதற்குப் பின்னர்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் தன் மௌனத்தைக் கலைத்து நேற்று மாலை தனது ட்விட்டர் பதிவில், கருத்து தெரிவித்திருக்கிறார்.
“தொடர்ந்து 3-வது முறையாக 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
**-வேந்தன்**�,