சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பாஜக – விசிக ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலையிலிருந்து பல்வேறு தரப்பினரும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உட்படப் பலரும் வந்திருந்தனர். அதுபோன்று தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
இதனை முன்னிட்டு அந்தந்த கட்சியினரும் தங்களது தலைவர்களை வரவேற்கும் வகையில் கொடிகளை நட்டனர். அப்போது விசிக பாஜக இடையே கொடி வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் கல் வீசியும் தாக்கியிருக்கிறார்கள். இதில் பாஜகவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட இருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனால் அங்குப் பரபரப்பு நிலவிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மோதலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்தனர். பாஜகவினரின் செயலை கண்டித்து விசிகவினர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதுபோன்று விசிகவினரை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி, மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அம்பேத்கர் சிலையைச் சுற்றிப் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரு கட்சி கொடிகளையும் அகற்றி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பாஜக ஒருபோதும் வன்முறையை அனுமதிக்காது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அன்பின் அடிப்படையில் பாஜக மறு கன்னத்தை காட்டும். அம்பேத்கரின் உண்மையான சிந்தாந்தத்தை சொல்லிக் கொடுக்காமல், கல்லூரி பசங்களை எல்லாம் தூண்டிவிட்டு அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர். இன்று காலை தாக்குதல் சம்பவம் நடந்த போது காவல்துறையினர் கை கட்டிக்கொண்டு பார்த்தனர். பாஜகவில் யாருக்கெல்லாம் அடிபட்டதோ அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்” என்றார்
**-பிரியா**