கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யு ட்யூப் சேனலுக்குப் பின்னால் திமுகவினர் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் திமுக ஐடி விங்கை சேர்ந்தவர் என்றும் இவரை மையமாக வைத்து திமுகவுக்குள் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. இவ்விவகாரத்தில் ஸ்டாலின் அறிக்கைக்குப் பின்னால் நடந்திருக்கும் விஷயங்கள் திமுகவுக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கறுப்பர் கூட்டம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஜூலை 16 ஆம் தேதி செந்தில்வாசனை சென்னையில் கைது செய்தது போலீஸ். தன்னைக் கைது செய்யவந்த போலீஸாரிடம், “எனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனாலும் நான் வரத் தயாரா இருக்கேன். வாங்க போகலாம்” என்று சொல்ல போலீசாரே ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். அதன் பின் செந்தில்வாசனிடம் விசாரணை நடத்தும்போது அவரது மொபைலை வாங்கி போலீஸார் சோதனையிடுகையில், கறுப்பர் கூட்ட யு ட்யூப் பக்கத்துக்கான யூசர் ஐடி, பாஸ்வேர்டு எல்லாம் செந்திலின் மொபைலில் இருந்ததும், கந்த சஷ்டி வீடியோ சர்ச்சையான பிறகு செட்டிங்சில் சென்று தன் பெயரை யு ட்யூப் பக்கத்தில் இருந்து மாற்றியதும் போலீஸுக்கு தெரியவந்திருக்கிறது. அதன் பிறகே செந்தில்வாசனை முறைப்படி கைது செய்கிறார்கள் போலீசார்.
மேலும் செந்தில்வாசன் திமுக ஐடிவிங்கில் இருந்ததும், திமுக ஐடிவிங் மாநிலச் செயலாளார் பிடிஆர். தியாகராஜனோடு இருக்கும் படங்களும் பிறகு தெரியவந்தன. இதையடுத்து போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், திமுக ஐடி விங்கில் செந்தில் வாசன் பணி செய்து வந்தார் என்றும், அதை தவிர இதுபோன்ற தனது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் செயல்பட்டு வந்திருப்பதும் தெரிந்திருக்கிறது. .
இதற்கிடையே பிரசாந்த் கிஷோரின் ஐபேக்டீம் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், **“செந்தில்வாசன் திமுக ஐடி விங்கில் இருக்கிறார். இது தொடர்பான தகவல்களை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தும். எனவே தலைமையே இதுகுறித்து விளக்கம் தெரிவிப்பது நல்லது” என்று கூறியிருக்கிறார் பிகே. அதன் அடிப்படையில்தான் இந்து விரோதியா திமுக என்ற ஓர் அறிக்கையையே ஸ்டாலின் வெளியிட்டார்** என்கிறார்கள்.
மேலும், “பிடிஆர் தியாகராஜன் தலைமை வகிக்கும் ஐடிவிங் உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதால்தான், பிரசாந்த் கிஷோர் இதை பெரிதுபடுத்தி ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பிகேவுக்கு பிடிஆர் தியாகராஜன் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஒரு புகார் தலைமைக்கு சென்றிருக்கிறது. அண்மையில் காணொலியில் நடந்த திமுக ஐடி விங் நிர்வாகக் கூட்டத்தில் கூட , ‘பிகே உன் மாமனா மச்சானா? ஐடி விங்குக்கு வேலை செய்யுங்கள். பிகேவுக்கு வேலை செய்யாதீர்கள்’ என்று பிடிஆர் தியாகராஜன் பேசியிருக்கிறார். இதுபோல பிகேவுக்கும், பிடிஆருக்கும் இடையில் முரண்பாடுகள் தொட்ர்ந்து நிலவுகின்றன. ஒரு கட்டத்தில் ஐபேக்கின் உயர் மட்ட வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து கூட பிடிஆரை நீக்கிவிட்டார்கள்.
இந்த பின்னணியில் பிகே கொடுத்த அழுத்தத்தால்தான் ஸ்டாலின் அறிக்கையே வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஆண்டாள் சர்ச்சை வெடித்தபோது கூட ஸ்டாலின் இந்த மாதிரி ரியாக்ஷன் காட்டவில்லை. இன்னும் கொஞ்சம் பின்னோக்கினால் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திக தலைவர் கி.வீரமணி பிரச்சாரத்தில் கிருஷ்ணரை பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்ற சர்ச்சை கிளம்பியது. அப்போது சில திமுக வேட்பாளர்கள் ஸ்டாலினிடம், ‘வீரமணியின் பேச்சால் நாங்கள் கோயில்களுக்கெல்லாம் சென்று ஓட்டுக் கேட்க முடியவில்லை’ என்று முறையிட்டனர். அப்போது கூட ஸ்டாலின் அசைந்துகொடுக்கவில்லை. ஆனால் இப்போது அறிக்கை வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பிகேவுக்கும், பிடிஆருக்கும் இடையே நடக்கும் இந்த விஷயங்களும் அதற்கு பிகே கொடுக்கும் முக்கியத்துவமும்தான்” என்கிறார்கள் திமுக தகவல் தொழில் நுட்ப அணித் தரப்பில் சிலர்.
**-வேந்தன்**
[ஐபேக் மாமனா, மச்சானா? ஐடி விங் கூட்டத்தில் பிடிஆர்](https://minnambalam.com/politics/2020/05/19/51/ipac-itwing-dmk-ptr-panalivel-thiyagarajan-prasanth-kishore)
�,”