pமாநிலங்கள் விரக்தி அடைந்துள்ளன: ஜெயலலிதா

Published On:

| By Balaji

1984ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜெயலலிதா ஆற்றிய முதல் உரையை அவரது பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) நினைவூட்டுவது ஜெயலலிதாவுக்கான நினைவுகூர்தல் மட்டுமல்ல, கூட்டாட்சிக்கான நினைவுகூர்தலும் கூட.

ஜெயலலிதா முதன்முறையாக மாநிலங்களவையில் 1984 ஏப்ரல் 23ஆம் தேதி, இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது உரையாற்றுகிறார்.

“துணை சபாநாயகர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு முன்பு பேசிய உறுப்பினர் சரியாக முப்பது நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இது எனது முதல் பேச்சு என்பதால், ஐயா, எனக்கு குறைந்தது 15 நிமிடங்களாவது கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் ஐயா மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த அவையின் உன்னத மரபுகளை நான் முழுமையாக அறிந்திருக்கிறேன். இது ஆரம்பத்தில் இருந்தே நம் நாட்டின் மிகச் சிறந்த புத்திஜீவிகளின் கூடுதுறையாக இருந்து வருகிறது.

இந்த மூத்தோர் சபையில் ‘இளம் ரத்தம்’ அதாவது நான் உறுப்பினராக்கப்பட்டது குறித்து அண்மையில் பத்திரிகைகளில் நிறைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐயா மற்றும் இங்குள்ள அனைத்து மூத்த உறுப்பினர்களுக்கும் உறுதியளிக்க நான் அவசரப்படுகிறேன். மாநிலங்களவையின் கௌரவம் மற்றும் மாண்பினை நிலைநிறுத்த நான் ஒருபோதும் தவற மாட்டேன் என்ற எனது புனிதமான வார்த்தையை நான் உங்களுக்குத் தருகிறேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, 1962ஆம் ஆண்டில் எங்கள் முன்னோடித் தலைவரான அண்ணா தனது திடமான முதல் உரையை இங்கே ஆற்றியபோது அது நாடு முழுமைக்கும் மின்சாரத்தைப் பாய்ச்சியது. அதே ராஜ்யசபாவின் தரையில் இங்கே நின்று பேசுவது ஒரு பெரிய மரியாதை என்று நான் கருதுகிறேன். அண்ணா தனது முதல் பேச்சால் நாடு முழுவதும் மின்சாரத்தைப்போல உணர்வுகளைப் பரப்பினார். அதே வேளையில், எனது முதல் உரையின் கருப்பொருளாக இன்று நான் மின்சாரத் துறையை எடுத்துக் கொள்கிறேன்.

எனது தலைவரான தமிழக முதல்வர், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் குரலை இங்கே எதிரொலிக்க, கட்சியில் உள்ள எனது சகாக்களுடன் சேர்ந்து என்னை இங்கு அனுப்பியுள்ளார். இந்த தேசிய மன்றத்தில் தமிழக மக்களின் குரல் குறிப்பாக, நமது சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளின் பிரதிநிதியாக, உழைக்கும் மக்கள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பெண்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.

(மின்சாரப் பிரச்சினை பற்றி விரிவாகப் பேசுகிறார். அதன் சுருக்கமான வடிவம் இதோ)

தமிழகம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்க 1971-72 முதல் 25 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மின்வெட்டுக்களை மாநில அரசு விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதன் விளைவாக, மாநிலத்தில் தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தி மோசமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைவதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்தது. மேலும் 235 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மெட்ராஸ் அணுமின் திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள 1967இல் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அந்த நேரத்தில், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கல்பாக்கத்தின் முழு உற்பத்தியும் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமிழகத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் ஒரு தெளிவான புரிதல் இருந்தது –

1968ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது, இந்தத் திட்டத்துக்குத் தேவையான 2,500 ஏக்கர் நிலத்தை – இலவசமாக – வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டது. கல்பாக்கம் அணு உலையின் முதல் பிரிவின் முழு மின்சாரமும் தமிழகத்துக்குத்தான் என்றும், இரண்டாவது பிரிவில் பாதி மின்சாரம் ஆந்திராவுக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

தமிழக முதல்வர் 1982 ஜூன் 1ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கல்பாக்கத்திலிருந்து தமிழகத்துக்கு முழு உற்பத்தியையும் ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மத்திய எரிசக்தி அமைச்சர், 1982 அக்டோபர் 15ஆம் தேதியிட்ட கடிதத்தில்,மத்திய திட்டங்களிலிருந்து வரும் சக்தியை பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த முன்மொழிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முடியாது

கல்பாக்கம் மற்றும் நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கு ஒதுக்குமாறு தமிழகச் சட்டமன்றத்தில் 1984 மார்ச் 7ஆம் தேதியன்றும், மார்ச் 8ஆம் தேதியன்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என் உரையை முடிக்கும் முன்னர், 1963 டிசம்பரில் மாநிலங்களவையில் எங்கள் முன்னோடித் தலைவரான அண்ணாவின் உரையிலிருந்து சில பகுதிகளை நான் மேற்கோள் காட்டுகிறேன்:

’கூட்டாட்சி கட்டமைப்பின் செயல்பாடுகள் மாநிலங்களின் மனத்தில் ஒரு விரக்தியை உருவாக்கியுள்ளன. மத்திய அரசு பிச்சை போடுவதைப் போல கொடுத்ததை வாங்கிச் செல்பவர்களாக (dole getting corporations) மாநிலங்கள் மாறி வருகின்றன. தாங்கள் பின் தள்ளப்படுவதாக மாநிலங்கள் உணர்கின்றன. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் இயற்கையானது’

21 வருடங்கள் கழித்து அண்ணாவின் வார்த்தைகள் இன்றும் நன்றாகவே பொருந்துகின்றன. நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். மாநிலங்களுக்கான ‘சக்தி’ இருவகைகளிலும் அதிகரிக்கப்பட வேண்டும். முதலாவதாக, அண்ணா பொருள் கொண்ட அதிக அதிகாரம் (சக்தி). இரண்டாவதாக, கல்பாக்கம் மற்றும் நெய்வேலி ஆகியவற்றிலிருந்து மின்சார வடிவிலான அதிக சக்தி கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அமைகிறேன்” என்று பேசினார் ஜெயலலிதா.

– ஜெயலலிதா பேசி 36 வருடங்கள் கழித்தும் மாநிலங்களுக்கான அதிகாரம் அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் கையிலிருந்த தமிழகத்தின் அதிகாரம் இன்னும் டெல்லியிலேயே இருக்கிறது. முன்பைவிட கூடுதலாகவே குவிந்திருக்கிறது. இன்று ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிப்பவர்கள், மரியாதை செலுத்துபவர்கள் அவரது இந்த முதல் உரையை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

**-ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel