தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ஜனவரி 5 ஆம் தேதி கைது செய்திருக்கிறார்கள்.
சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஏற்கனவே ஹேம்நாத் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில் ஆறு வருடங்களுக்கு முந்தைய மோசடிப் புகாரில் ஹேமநாத் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை ஜெ. ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார் . மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக சொல்லி தன்னிடம் சுமார் ஒரு கோடி அளவில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆஷா தனது பணத்தை திரும்பக் கோரியபோது, ஹேம்நாத் மறுத்துவிட்டார், அதற்குப் பதிலாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஹேம்நாத் அச்சுறுத்தியதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் (குற்ற எண் 789/2015) ஆனால் அந்த தொகை ரூ .50 லட்சத்துக்கு மேல் இருந்ததால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆவண மோசடி (ஈ.டி.எஃப்- II) பிரிவு வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்துள்ளது மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.
ஹேம்நாத்தும் சித்ராவும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து, சில மாதங்களுக்கு முன்பு திருமணத்தை பதிவு செய்தனர். டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை, சென்னை புறநகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் சித்ரா.
இது தொடர்பாக ஹேம்நாத்திடம் ஆறு நாட்கள் விசாரித்த பின்னர், சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் நாசரேத்பேட்டை போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் விசாரணைக்கு வருவாய் கோட்ட அலுவலர் முன் ஆஜராக வேண்டியதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த இரண்டாவது கைது நடந்துள்ளது.
**-வேந்தன்**�,