இன்று குழந்தைகள் தினம். ஆண்டுதோறும் இன்றைய தினத்தில் மட்டும் தவறாமல் குழந்தைகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகிறது. ஆனால் மற்ற நாட்களில் அவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் எத்தனை வேதனை அனுபவிக்கிறார்கள் என்பது சமீப நாட்களாக நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்தன.
தற்போது கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது, பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் பள்ளியான சின்மயா வித்யாலாயா பள்ளியில் படித்து வந்த மாணவி, பொன் தாரணி, இந்த பள்ளியில் படிக்கப் பிடிக்கவில்லை என அதேபகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்தச்சூழலில் அவர் கடந்த 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது, மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யரையும் விடக் கூடாது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மாணவியின் உடலைக் கைப்பற்றிய உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் சின்மயா பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
“தாரணி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து பள்ளி முதல்வரிடம் கூறியும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக ‘ஒரு பேருந்தில் செல்லும் போது யாராவது இடித்துவிட்டார்கள் என நினைத்து விட்டுவிடு’ என கூறி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். ஒருவேளை அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் மகள் உயிரோடு இருந்திருப்பார். எங்கள் மகளின் மரணத்துக்கு காரணமான பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், என அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம்” என மாணவர்கள் அமைப்பினர், பெற்றோர்கள், உறவினர்கள், அப்பகுதி மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் தாய் கூறுகையில், “அந்த ஆசிரியரால் எங்க மகளுக்குப் பிரச்சினை வந்ததும் பிரின்சிபல்கிட்ட சொல்லியும் அவங்க சரியா நடவடிக்கை எடுக்கலை. என் மகளை கவுன்சிலிங்குக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. பிரின்சிபலுக்கு எல்லா விஷயமும் தெரியும். அவர் உங்க அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்லாதனு சொல்லி வச்சிருக்காங்க. அதனால என் பிள்ள மறச்சிட்டா.. மறச்சிட்டா…. ஸ்கூல் மாத்தும் போதும் கூட சொல்லல.
அந்த மேடம் பஸ்ல போகும் போது, மேல இடிச்சிக்கிட்டு தான போறோம். இத பெருசு படுத்தாதனு சொல்லிருங்காங்க… என் பிள்ள இத மனசுக்குள்ள வச்சிக்கிட்டே போய்ட்டா… பிரண்ட்ஸ் மூலம்தான் இப்பவே எங்களுக்கு தெரிஞ்சுது. பெத்த அம்மாகிட்ட சொல்லாதனு ஏன் சொல்லனும். என் பிள்ள உசுருதான போச்சு. என்கிட்ட சொல்லியிருந்தா என் பிள்ளைய காப்பாத்திருப்பனே. ஊருக்கு போமா-னு சொல்லிட்டு இப்படி பன்னிக்கிட்டாலே…
6 மாசமா டார்ச்சர் பன்னிருக்காரு. என் பச்சமண்ண ஏமாத்திட்டாங்க… ஸ்கூல் மாத்துறதுக்கு என்ன காரணம்னு கேட்டேனே. இந்த பிரன்சிபல் சொல்லாதனு சொன்னதால மறச்சிட்டாலே… ” என தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார்.
இந்நிலையில் பள்ளி முதல்வர் மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். பெங்களூருவில் அவர் தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரை கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். அவரிடம் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் உமா மற்றும் ஜெயசந்திரன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் தானே பொறுப்பு? அந்த மாணவி புகார் அளித்தும் அலட்சிமாக இருந்தது ஏன்?. பேரண்ட்ஸ்கிட்ட சொல்லாதனு ஏன் சொன்னீங்க? என அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
அதுபோன்று சின்மயா பள்ளியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி முதல்வர் கைதான நிலையில் மாணவி தாரணியின் உடலைப் பெற்றுக்கொள்வதாகப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கதறி அழுதபடி மாணவியின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மாணவியின் வீட்டுக்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ்“ எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போன்ற வலி எனக்கு இருக்கிறது. சரியான முறையில் நீதி விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை 14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,