pநூலுக்கு பரிசு: தவிர்த்த தலைமைச்செயலாளர்

Published On:

| By admin

தன்னுடைய நூலை பரிசுக்காக தமிழக அரசின் தெரிவுக்குழு தேர்ந்தெடுத்த நிலையில், அதனை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தலைமைச் செயலர் இறையன்பு.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் இலக்கியவாதியுமான வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் இப்பதவிக்கு வந்ததில் இருந்து பல முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் தனது புத்தகத்திற்கு தான் தலைமைச் செயலாளராக இருக்கும் போது விருது பெறுவது சரியாக இருக்காது என்று கூறி அதை தவிர்த்திருக்கிறார் இறையன்பு.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு தலைமைச் செயலாளர் ஏப்ரல் 28-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ” தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று…. தெரிவு குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பகத்தாருக்கு பரிசு வழங்கும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நான் எழுதிய, ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற புத்தகம் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெறும் விழாவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2021 பிப்ரவரி திங்களில் தெரிவுசெய்யப்பட்ட எனது படைப்பிற்கு இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையதல்ல. எனவே எனது படைப்பிற்கு வழங்கப்படும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share