பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 29) கொளத்தூர், எவர்வின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்குச் சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம், ‘அவரைப் பேசச் சொல்லுங்கள்’ என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேச விரும்புகிறேன்.
மகளிருடைய வாழ்வுக்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கலைஞருடைய காலத்தில் ஐந்து முறை ஏற்கனவே ஆட்சியிலிருந்தபோது, இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களையெல்லாம் தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.
பெண்களுடைய முன்னேற்றம்தான் முக்கியம் என்று கருதி, சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், திருமணச் செலவுக்கு நிதி வழங்கப்பட்ட ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.
தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம், எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இலவசமாகப் பயணம் செய்யலாம். இங்கே கூட இந்தச் சான்றிதழ்களை வாங்க வந்த சகோதரிகளும், தாய்மார்களும், நாங்களெல்லாம் பேருந்தில் இலவசமாகச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நன்றி சொன்னீர்கள். தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய உறுதிமொழிகளை எல்லாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.
**-பிரியா**
�,