தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் தலைவர்கள் இன்று (நவம்பர் 29) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை ஒட்டி 700 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், இதில் வகுப்புவாத, இனவாத பிரச்சினைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட முடியாது என்று தமிழக அரசுக்கு ஆளுநர் அழுத்தம் கொடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின. அதை மெய்ப்பிப்பது போலவே தமிழக உள்துறை (சிறைகள்) வெளியிட்ட அரசாணையில் மத, இன மோதல் வழக்குகளில் கைதானவர்களை விடுதலை செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உடனடியாக எதிர்த்து திமுகவின் கூட்டணிக் கட்சியும் மமகவின் தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டார். மேலும் நவம்பர் 20 ஆம் தேதி சென்னையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மௌனாலா காஜா மைதீன் பாகவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிலர், ‘சமுதாயம் முக்கியமா, கூட்டணி முக்கியமா என்பதை இஸ்லாமிய கட்சிகள் முடிவு செய்ய வேண்டிய நேரமிது’ என்று பேசினாலும், பலர், ‘அரசின் கருணையே இப்போது முக்கியம். இதற்காக நாம் முதல்வரை சந்திப்போம்’ என்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர்.
நம்மிடம் பேசிய இஸ்லாமிய கூட்டமைப்பினர், “கூட்டத்தில் சிலர் காரசாரமாக பேசினாலும் இந்த விஷயத்தில் எங்களுக்கு இப்போது அரசின் கருணைதான் தேவைப்படுகிறது. ஆயுள் தண்டனை என விதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டுகளையும் தாண்டி சிறையில் வேதனைப்படுகிறார்கள். இந்த விடுதலை மூலம் அவர்கள் வெளியே வந்து பெரிதாக செயல்படப் போவதில்லை. 75 வயதைத் தாண்டிய அவர்கள் சிறையில் இறப்பதற்கு பதிலாக குடும்பத்தினர் மத்தியில் சில காலம் வாழ்ந்து சாகப் போகிறார்கள். அவ்வளவுதான். இதில் எந்த அரசியலும் இல்லை. முதல்வரை சந்தித்து இதை விளக்குவதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். விரைவில் முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினர். இதை மின்னம்பலத்தில், [முதல்வரை சந்திக்க நேரம் கேட்கும் இஸ்லாமிய கூட்டமைப்பினர்](https://www.minnambalam.com/politics/2021/11/23/23/all-islacmic-association-seek-appintment-to-meet-cm-mkstalin) என்ற தலைப்பில் செய்தியாக்கியிருந்தோம்.
முதல்வரை சந்திப்பதற்கு முன்னரே இந்த கூட்டமைப்பினர் 25 ஆம் தேதி முதல்வரின் முதன்மைச் செயலாளரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இந்த அரசாணையில் இருக்கும் அநீதிகளையும் சட்ட ரீதியான குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 29) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டமைப்பின் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.
“இந்த சந்திப்பின் போது சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்வதின் அவசியத்தை மிகவும் வலியுறுத்தி எடுத்து கூறினார்கள். இந்த ஆட்சியில் விடுதலை இல்லையெனில் வேறு எப்போதும் விடுதலை கிடைக்காது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை எடுத்துரைத்தனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலைமைச்சர் தெரிவித்தார்”என்று கூட்டமைப்பின் தலைவர் பாகவி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த சந்திப்பையடுத்து நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
**-வேந்தன்**
�,