மகளிர் விடுதிகள், குழந்தைகள் திருமணம்: முதல்வர் அறிவுறுத்தல்!

Published On:

| By Balaji

மகளிர், குழந்தைகள், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் கொரோனா பாதிப்பைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் துறை வாரியாக இருக்கும் பிரச்சினைகள் குறித்து அத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் நேற்று (ஜூலை 28) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சமூக சீர்திருத்தத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், “மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும் . பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும். குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை போன்ற சமூக அவலங்களைக் களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இதுகுறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் அவர், “குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு, உலர் உணவுப் பொருட்கள், சத்து மாவு, முட்டைகள் ஆகியவற்றைச் சுத்தமாகவும், உயர் தரமானதாகவும் வழங்க வேண்டும்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் வரும் உயரக்குறைவு (Stunting), மிகுந்த மெலிவுத் தன்மை, ரத்தச்சோகை ஆகிய குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களைக் கண்டறிந்து சிறப்புக் கவனம் செலுத்தித் தமிழகத்தினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாகத் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத் தொகைத் திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் மேற்கொண்டு அவர்களுக்குச் சிறப்பான வாழ்க்கையை உருவாக்கிட வேண்டும்.

அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வையிட்டு, அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்குவதையும், முதியோர்கள் உடல்நலத்துடன் மகிழ்வுடன் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். அரசு உதவி பெறாமல் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களும் பதிவுபெற்று அங்கீகாரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங்களில் விடுதிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களில் அவர்களின் பாதுகாப்பினையும், கவனிப்பினையும் உறுதிசெய்திட வேண்டும்” என முதல்வர் அறிவுறுத்தினார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share