மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவுக்குள்ளும் மில்லியன் டாலர் கேள்வியால் மின்னிக் கொண்டிருக்கிறது. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த தேர்தலிலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றும் அவரை வைத்தே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வியூகம் அமைக்கப்படும் என்றும் ஜூலை மாதத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பேட்டி கொடுத்தார். அதை எடப்பாடி பழனிசாமியும் மற்ற கொங்கு அமைச்சர்களும் ரசித்தார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்குச் சென்றபோது மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் அடுத்தடுத்து மேலும் சில அமைச்சர்களின் பேட்டிகள் முதல்வர் வேட்பாளரைச் சுற்றி அமைய சலசலப்பு அதிகமானது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் 2021 என்று போஸ்டர்கள் ஒட்டப்பட, சலசலப்புகள் சர்ச்சையாக சத்தமிட்டன. அதேநாளில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தைச் சென்று சந்தித்துப் பேசினார்கள். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில் இந்த விவகாரம் பற்றி யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கூறியிருந்தனர். அதுமுதற்கொண்டு வெளிப்படையாக இந்தச் சலசலப்பு ஓய்ந்தாலும் உள்ளுக்குள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இந்தச் சூழலில் ஓ.பன்னீரின் தர்மயுத்தத்துக்கு முதல் மாசெவாக ஆதரவு தெரிவித்த விழுப்புரம் லட்சுமணன் திமுகவுக்குப் போய்விட்டார். ஓ.பன்னீரிடம் அவர் வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றுகூட நிறைவேறாத நிலையில்தான் அவர் திமுகவுக்குச் சென்றார். ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட கே.பி.முனுசாமிகூட எடப்பாடி பழனிசாமியின் அன்பு வளையத்துக்குள் சென்றுவிட்டதாக அதிமுகவினர் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் கூட்டறிக்கைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியையே அடுத்த முதல்வர் வேட்பாளராக ஆக்குவதற்காக பன்னீரைச் சம்மதிக்க வைக்க பலத்த முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளுக்கிடையே இன்னொரு சர்வேயும் அதிமுக தலைமையைச் சென்றடைந்தது. அதாவது திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் சர்வேக்களை எடுத்து திமுகவுக்கு 180 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே போகப் போக கொரோனா ஊரடங்கால் போன் வழியாக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சற்று யோசித்த திமுக தலைவர் ஸ்டாலின் தனியாக ஒரு ஏஜென்சி மூலம் வேறு ஒரு சர்வே நடத்தியிருக்கிறார். அந்த சர்வேயில் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் அவ்வளவு பெரிய வெற்றி கிடைப்பது கடினம் என்று தெரியவந்திருப்பதாக அதிமுக தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. ஆக ஒற்றுமையாக இருந்து கடுமையாக முயற்சி செய்தால் அதிமுகவுக்கே மீண்டும் ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை என்பதே அந்த சர்வே சொல்லியிருக்கும் சங்கதி.
இது ஓ.பன்னீருக்கும், எடப்பாடிக்கும் தெரியவந்த நிலையில்தான் ‘நமக்குள் பிளவுபட்டு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டாம்’ என்று பன்னீரிடம் சில மூத்த அமைச்சர்களும் கொங்கு அமைச்சர்களும் சமாதானம் பேசியிருக்கிறார்கள். நான்கு வருடங்களாகத் தொடர்ந்து பல்வேறு சவால்களைச் சந்தித்து ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறினாலும் சாதாரண மக்களுக்கு அதிமுக அரசு மீது பெரிய அளவு கோபம் இல்லை என்று அந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிற நிலையில் இதை வைத்தே ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்த தொடர்முயற்சிகளின் விளைவாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இரு முக்கியமான நிபந்தனைகளை விதித்திருக்கிறார் ஓ.பன்னீர் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
அந்த நிபந்தனைகளில்தான் இருக்கிறது ட்விஸ்ட். முதல் நிபந்தனை, தன் மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் தான் கேட்ட துறை தனக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வம் வைத்திருக்கும் இரு நிபந்தனைகள். இதில் என்ன ட்விஸ்ட் என்றால் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். பாஜகவைக் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டால் அதிமுக இயல்பாக வாங்கும் வாக்குகளைக் கூட இழக்க நேரிடும் என்பதுதான் அவருக்குக் கிடைத்திருக்கும் ரிப்போர்ட். ஆனால் ஓ.பன்னீரோ எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தன் மகனை மத்திய அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார். பாஜக அமைச்சரவையில் இணைந்துவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் தவிர்க்க முடியாததாகிவிடும். பாஜகவுக்கு அறுபது இடங்கள் என்று முருகன் ஒருபக்கம் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில் தான் முதல்வர் வேட்பாளர் ஆக வேண்டுமென்றால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எடப்பாடி ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.
ஓ.பன்னீருக்குத் தனது ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பு இல்லை. அவர் நம்பர் டூவாக இருக்கப் பழகிவிட்டார். அதேநேரம் இவர்கள் இருவரின் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனது அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ள உத்தி வகுத்திருக்கிறதோ என்ற சலசலப்புகளும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடையே பேசப்பட்டு வருகிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்.
�,