தலைநகர் சென்னையில் நேற்று பெய்த திடீர் கனமழை ஏற்படுத்திய பாதிப்பு, கொஞ்ச நஞ்சமல்ல. பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்குதான் தெரியும், அவர்கள் அனுபவித்த அவதி!
இது ஒரு புறம் இருக்க, வழக்கமாக எந்த வானிலை மாற்றத்தையும் முன்னறிவித்து எச்சரிக்கைவிடுக்கும் சென்னை வானிலை மையத்தால் ஏன் இதை முன்னுணர முடியவில்லை என பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவியது. அதன் காரணமாக, நேற்றைக்கு கடலோர மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் இலேசான கனமழைவரை பெய்யலாம் என மட்டுமே வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதையடுத்து, இன்றும்கூட வழக்கத்துக்கு மாறான மழையோ, கனமழையோ, அதிகன மழையோ பெய்யும் என வானிலை மையத்தினர் ஒரு வார்த்தைகூட சொல்லியிருக்கவில்லை.
அரசின் வானிலைத் துறையின் கணிப்புகளுக்கு இணையாக, கணினி மூலம் கணிப்புகளை வெளியிட்டுவரும் தனிப்பட்ட வானிலை ஆர்வலர்களும் சரியாக கணிப்பது உண்டு. அவர்களாலும் நேற்றைய இந்த மழையை சிறிதளவுகூட முன்னரே உணரமுடியவில்லை. இதற்காக அவர்கள் தங்களைப் பின்தொடரும் தகவல்விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஊடக நேர்காணல்களில் வானிலை மையத்தின் அதிகாரியிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, “ மேலடுக்கு சுழற்சியானது கணிப்புக்கு மாறாக வேகமாக நிலப் பகுதிக்கு நகர்ந்துவிட்டது.” என்று குறிப்பிட்டு, சரியாக கணிக்கத் தவறியதை ஒருமாதிரியாக ஒப்புக்கொண்டார்.
ஆக, இங்கே இருக்கின்ற அறிவியல் தொழில்நுட்பக் கணிப்பு முறைகளுக்கு அப்பாற்பட்டது நிலநடுக்கம் போன்றவை மட்டுமல்ல, கனமழையும்தான் என்பதைக் காட்டியிருக்கிறது, நேற்றைய நாள்.
Nothing but Rain and Mismanagement! #ChennaiRains pic.twitter.com/cYzqAy0tYp
— DATCHANAMOORTHY RAMU 🔥 (@iamdatchana) December 31, 2021
இந்த அளவுக்கு கனமழை வெளுத்து வாங்குமென எதிர்பார்க்கமுடியாதுதான் என்றாலும், வடகிழக்குப் பருவமழை முடிந்துவிட்டது என இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படியொரு மழை வந்தால் என்ன செய்வது என்பதை அரசு யோசித்ததா இல்லையா? அரசு நியமித்த வல்லுநர் குழு இதுவரை ஏதாவது அரசுக்கு பரிந்துரைகளைச் செய்திருக்கிறதா? அப்படி செய்திருந்தால் அரசுத் தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நேற்று இரவு 9 மணியளவில் சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துறையின் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவரிடமிருந்து தெளிவான பதில் இல்லை. “திடீரெனப் பெய்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்கிறபடி விளக்கமளித்தார்.
தமிழக அளவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு கேட்ட நிதியை மைய அரசு ஒதுக்கவில்லை என அந்த விவரங்களைக் கூறினார்.
சென்னையைப் பொறுத்தவரை, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டியது மாநகராட்சிக் கட்டமைப்புதான். கழிவுநீரகற்றல் பணிகளை மேற்கொள்ள வேண்டியது, சென்னைக் குடிநீர் வாரியம்.
கடந்த நவம்பரில் இப்படி பெய்த திடீர் மழையின்போது, முந்தைய ஆட்சியில் சரிவர வெள்ளநீர் மேலாண்மை ஏற்பாடு செய்யப்படவில்லை; பராமரிக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பிலும் ஆளும் கட்சித் தரப்பிலும் காரணம் கூறப்பட்டது.
போனது போய்விட்டது; இனி என்ன நேர்ந்தாலும் புதிய அரசாங்கம்தான் செய்தாகவேண்டும் என்கிறபோது, இப்படியான மேகவெடிப்பு மழை வந்தால் என்னென்ன செய்யலாம் என்று அதிகாரிகளாவது யோசிக்கவேண்டாமா என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இப்படியான குறிப்பான நெருக்கடி கட்டங்களிலாவது, மாநகராட்சி அதிகாரிகளின் வழக்கமான பணியைச் செய்வதில் தடங்கல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே, இவையெல்லாம் தானாக நடக்கும் எனக் கூறும் ஓய்வுபெற்ற அதிகாரிகள்,
அப்படியா இங்கு நடக்கிறது? மழைநீர் பாதிப்பு என்றால் முதலமைச்சரே எல்லா இடங்களுக்கும் நேரில் போய் பார்வையிடுகிறார்; அவருடைய பொன்னான நேரத்தை இந்த வகையில் செலவிடவேண்டுமா? அவரே மாநகராட்சி எல்லைக்குள் ஆய்வு எனச் செல்லும்போது உரிய அதிகாரிகள் அனைவரும் அவருடனேயே வரிசைகட்ட வேண்டியிருக்கிறது; இந்தப் பணியை அமைச்சர்கள்கூட செய்யமுடியும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
முந்தைய திமுக ஆட்சியின்போது சென்னையைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்போது இருந்த மேயரும் இதைப் பார்த்துக்கொள்வார்கள்; இப்போதும் வடசென்னைக்கும் தென்சென்னைக்குமாக இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்; மேயர் இல்லாத குறையை அவர்களால் சரியாக ஈடுகொடுத்து செய்யமுடியும்? அவர்களை ஏன் விடுவதில்லை எனக் கேட்பவர்களும் ஒரு தொகுதியினர் இருக்கின்றனர்.
இந்த சூழலில் இன்னொன்றையும் தலைநகர அரசியலிலும் பொதுநிர்வாகத்திலும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.
கடந்த வாரம் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் மனமெல்லாம் மகிழும்படியாக அவர்களுக்கான தற்காலிகப் பாதை ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படியொரு பாதை அமைக்கப்பட்டும் அதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தமுடியாதபடி ஆகிவிட்டது.
மீண்டும் அந்த வசதியை ஏற்பாடுசெய்ததைத் தொடங்கிவைப்பதற்கு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவுடன் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் கலந்துகொண்டார்; சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கடல் அணுகுப் பாதையைத் திறந்துவைத்த அந்த நிகழ்வில், அரசுச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் மாநகராட்சி ஆணையர் கலந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் கொண்டதா? எதிர்க்கட்சித் தலைவர்களான பழனிசாமியும் ஓ.பன்னீரும் சொல்வதைப்போல, அரசு விழாக்களை விளம்பர நிகழ்ச்சியைப் போல நடத்துவது என்பதால்தான் அதிகாரிகளின் நேரம் முறையாகப் பயன்படுத்தப்பட முடியாதபடி ஆகிறதா என வரிசையாக கேள்விகள் வந்தபடி இருக்கின்றன.
**-முருகு**
�,”