j3 நாட்களுக்கு எச்சரிக்கை தேவை: அமைச்சர்!

Published On:

| By Balaji

அடுத்தடுத்த நாள்களில், அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நவம்பர் 9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கை தேவை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் காரணமாகத் மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கன மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பலரும் களப் பணியில் ஈடுபட்டனர்.

அதுபோன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறுகையில், “ தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 14.2 மி.மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.08 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 346.1 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 241.2 மி.மீட்டரை விட 43 சதவீதம் அதிகமாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 48 நிவாரண முகாம்களில், 1,107 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3,58,500 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மழை நீர் தேங்கியுள்ள 290 பகுதிகளுள், 59 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 231 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 14 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

சாலைகளில் விழுந்த 75 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 178 மருத்துவ முகாம்கள் மூலம் 3947 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 4 போ் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 கால்நடைகள் இறந்துள்ளன. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 70 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோரத்தின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், சுமத்திரா கடற்கரையின் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 9.11.2021 அன்று உருவாகும் என்றும், இது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 9.11.2021 முதல் 12.11.2021 வரை வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மதுரை, தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுவர் இடிந்து விழுந்தது, மழை நீர் சூழ்ந்தது, பாம்புகள் தென்பட்டது, மரம் விழுந்தது, வாகனங்கள் மழை நீரில் சிக்கிக் கொண்டது போன்ற 261 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வளத் துறை மூலம் 90 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்குப் பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஆட்சியை விட தற்போது சிறப்பாக பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்த அவர், மழை எதிரொலியால் அடுத்த மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel