சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (ஜனவரி 7) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி குடிநீர் தரக்கூடிய ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன.
மழை வெள்ளத்தின் போது தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காகக் காத்திருக்காமல், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 801 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டோம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆலோசனைகளைப் பெற்றோம்.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகராட்சி நிர்வாகத் துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை போன்ற பல துறைகள் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டி இருக்கிறது.
இந்தப் பணிகளுக்காக முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கிறேன். உடனடியாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பதில் அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது.
அதுபோன்று இந்த அரசு விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாகப் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட, பின் குறுவை பருவத்தில் விளைந்த பயிர்கள், சேதமடைந்த முன் பருவத்தில் பயிரிடப்பட்ட விளைந்த சம்பா நெற்பயிர்கள், மறு நடவுச் செலவு, பயிறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறு தானியப் பயிர்கள், கரும்பு பயிர்கள், தென்னை பயிர்கள் ஆகியவற்றுக்கு நிவாரணமாக 1 லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கு ரூ.132 கோடியே 12 லட்சம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு பெரு விவசாயிகளுக்கு இந்த நிவாரண நிதி இரண்டொரு நாட்களில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,