பரவலுக்குப் பெருவழி: டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக்கை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் தொற்று சற்று குறைய ஆரம்பித்திருக்கும் நேரத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோலவே, “கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும்” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது.எனவே,சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை முதல்வர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணிச் செயலாளர் சு.அ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், “தொழிற்சாலைகளும், பொது போக்குவரத்தும் முழுமையாக செயல்பட்டால் கொரோனா நோய் தொற்று பரவிடும், வழிபாட்டு தலங்கள் திறந்திருந்தாலும் அந்நோய் தொற்று மக்களை கடுமையாக பாதிக்கும் என்றால் உயிரைக் கொல்லும் சாராயத்தை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டும் கொரோனா பரவாது என்கிற தமிழக அரசின் எண்ணம் நாய் விற்ற காசு குறைக்காது” எனும் பழமொழியையே நினைவூட்டுகிறது” என சாடியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் பாதியளவேனும் மக்கள் நலனிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் கவனமெடுத்து தமிழக அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share