நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அந்த வரிசையில் சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடிஉள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பதவி பிரமாணத்தின்போது பல சுவாரசியங்கள் அரங்கேறின.
சென்னை மாநகராட்சியின் 134 வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், “நான் தினமும் வணங்கும் தில்லை அம்பலத்தான் மற்றும் அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம். தெய்வ அனுக்கிரகத்தால் வெற்றி பெற்றேன்’ என்று கூறி பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னை மாநகராட்சி 123வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மோகன் ‘சோசலிசம் ஓங்குக’ என்றும்,111 வது வார்டு திமுக உறுப்பினர் நந்தினி, ‘மாமனார் மீது ஆணை’ என்றும்,
107வது வார்டு விசிக மாமன்ற உறுப்பினர் கிரண் ஷர்மிலி, ‘புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க, எழுச்சித்தமிழர் திருமா வாழ்க, ஜெய் பீம்’ என்றும் கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.
104வது வார்டு திமுக உறுப்பினர் செம்மொழி, ‘ஒம் நமசிவாய’ என்றும், 98வது வார்டு சிபிஎம் உறுப்பினர் பிரியதர்ஷினி(21) ‘சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நாமம் வாழ்க’ என்றும்,
92வது வார்டு சுயேட்சை உறுப்பினர் திலகர், ‘கை கைவிட்டது; ஆனால் மக்கள் கைவிடாமல் என்னை தேர்ந்தெடுத்தார்கள். வாக்கு அளித்த மக்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி’ என்றும் கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.
42வார்டு சிபிசி வார்டு உறுப்பினர் ரேணுகா, ‘வெல்க பொதுவுடைமை கொள்கை; வெல்க திராவிட மாடல். வாழ்க ஸ்டாலின் ஐயா! வாழ்க விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணு’ என்று கூறி பதவி ஏற்று கொண்டார்.
2வது வார்டு சுயேச்சை உறுப்பினர் கோமதி, ‘தளபதி ஐயா வாழ்க! ஸ்டாலின் ஐயா வாழ்க’ என்றும், 128வது வார்டு திமுக உறுப்பினர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா , ‘அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை தொடங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி’ என்றும் கூறி பதவி ஏற்றனர்.
193 வது வார்டு அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி பதவியேற்றார். அப்போது திமுக உறுப்பினர்கள், ‘இது என்ன கச்சேரி நிகழ்ச்சியா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கோவிந்தசாமி, ‘நீங்கள் பேசியதை நான் பாடினேன் அவ்வளவுதான்’ என்று பதிலளித்தார். இதனால் சிறிந்து நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பல கவுன்சிலர்கள் தமிழில் இருந்த உறுதிமொழி படிவத்தை படிக்க முடியாமல் தவித்தனர். அதனால், மாநகராட்சி ஆணையர் சொல்லச் சொல்ல, கவுன்சிலர் அதை திரும்பச் சொல்லி பதவியேற்றுக் கொண்டனர்.
64 வது வார்டு அதிமுக உறுப்பினர் சோலை ராஜா பதவியேற்பின்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரை சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார்.
இதுபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன.
**-வினிதா**