சென்னை மாநகராட்சி தேர்தலை ஒட்டி போலீஸ் அதிகாரிகளையும் அரசு அதிகாரிகளையும் கண்காணிப்பதற்காக பாஜக சார்பில் குஜராத்திலிருந்து ஒரு டீம் களம் இறங்கியிருக்கிறது.
இந்த தகவலை சென்னை மாநகராட்சி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆயிரம் விளக்கு 113 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் மஞ்சு பார்கவியை ஆதரித்து கராத்தே தியாகராஜன் பிப்ரவரி 13ம் தேதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர்,”பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எனது டிரைவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சுப வீரபாண்டியன், திருச்சி வேலுச்சாமி கூறி வருகிறார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன். என்னைப்பற்றி காவல்துறைக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும்” என்று கூறிய கராத்தே தியாகராஜன்… அடுத்ததாக மேடையில் பேசிய தகவல்கள் எல்லாம் அதிரடி ரகம்.
“எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது தேவையில்லாமல் கவர்னரையும் பிரதமரையும் வம்புக்கு இழுத்தால், இந்த அரசாங்கம் 4 வருடம் கூட தாங்காது என்று சொல்லியிருக்கிறார். அவர் சாதாரணமாக எதையும் சொல்லி விட மாட்டார்.
இங்கே ஒரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து வீர வசனம் பேசுகிறார். இன்னொரு பக்கம் அவரது மருமகன் சபரீசன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து சமரசம் பேச முயற்சிக்கிறார். டெல்லியில் போய் மூன்றாம் பிறை கமல்ஹாசனைப் போல என்னதான் உருண்டு புரண்டாலும் அண்ணாமலை கிளியரன்ஸ் கொடுக்காமல் எதுவும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்… நீங்கள் திமுகவை நம்பி எதுவும் செய்தீர்கள் என்றால் அவர்கள் உங்களை கை கழுவிவிட்டு விடுவார்கள்.
நாங்கள் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக 37 டீம்களை போட்டிருக்கிறோம். சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரி பின்னாலும் எங்களது கேமரா சுற்றிக்கொண்டிருக்கிறது. பெங்களூர், குஜராத்திலிருந்து தனியாக டீம்களை சென்னை மாநகராட்சிக்கு இறக்கியிருக்கிறோம். எல்லா அதிகாரிகளின் மூவ்மெண்ட்களையும் நாங்கள் கூகுள் மூலம் கண்காணித்து வருகிறோம்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்… அப்புறம் நீங்கள் ஒழுங்காக ஓய்வு பெற முடியாது. நாங்கள் யாரையும் எச்சரிக்கவில்லை. நேர்மையாக நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். விதிகளை முழுமையாக மீறினால் காவல்துறை அதிகாரிகள் அதற்கான விலையை கட்டாயம் கொடுக்க வேண்டி இருக்கும்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எல்லாம் விஷயங்களும் அத்துப்படி. எங்களுக்கும் மாநில உளவுத்துறைகள் ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணாமலைக்கு குட் மார்னிங் சார் குட் ஈவினிங் சார் குட் நைட் சார் வரை சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் விரைவில் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள். இது பழைய பிஜேபி அல்ல. எதையும் எதிர்கொள்ளும் வேற மாதிரி பிஜேபி” என்று அதிரடியாக பேசியிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.
**ஆரா**