அரசு பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. 49ஆவது மேயராக ஆர்.பிரியா பதவி ஏற்றார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 9)சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் தொடங்கியது. மேயர் பிரியா தலைமை தாங்கினார்.
தொடக்க உரையாற்றிய மேயர் பிரியா, “ சென்னையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 66.72 லட்சம் மக்கள் தொகை இருந்தது. இது தற்போது 88 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மூலம் நாளொன்றுக்கு 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப் பெற்று சென்னை மாநகர் தூய்மையாக வைக்கப்படுகிறது. கல்வியை மேம்படுத்தப் பெருநகர சென்னை மாநகராட்சி வாயிலாக 281 பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவ மாணவியருக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து அவர் சென்னை மாநகராட்சியினை திறம்படச் செயல்படுத்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ,கல்விக்கான வரவு செலவில், மாணவ மாணவியர்கள் இடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
2022 – 23 ஆம் கல்வியாண்டில் 70 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.
281 சென்னை தொடக்க நடுநிலை ,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக 40 லட்சம் ரூபாய் செலவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவர்களுக்கு 7.50 கோடி ரூபாயில் விலையில்லா சீருடைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்பயா நிதியின் மூலம் 23.66 கோடி ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும்.
5.47 கோடி ரூபாயில் சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
6.91 கோடி ரூபாயில் தற்காப்புக் கலை பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 37 பள்ளிகளுக்கு வழங்கிய மாண்டிசோரி உபகரணங்களைச் சிறந்தமுறையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதை நடைமுறைப்படுத்துவதுடன், இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளிலும் படிப்படியாகக் கொண்டுவரப்படும்.
சென்னை பள்ளிகளில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் பழுது, மின் சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் கழிவறைகளில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சரி செய்து கொள்வதற்கு 119 சென்னை தொடக்கப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதமும், 92 சென்னை நடுநிலைப் பள்ளிகளுக்கு 30,000 ரூபாய் வீதமும், 38 சென்னை உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50,000 ரூபாய் வீதமும், 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு 50,000 ரூபாய் வீதமும் என மொத்தம் 281 தலைமையாசிரியர்களுக்கு 92.35 லட்சம் மிகாமல் செலவு மேற்கொள்வதற்கு அவசர செலவின நிதி வழங்கப்படும்.
சென்னை பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பேணிக்காத்து கல்வியைத் திறம்படக் கற்க திருவான்மியூர் மற்றும் அதை சுற்றியுள்ள 23 சென்னை பள்ளிகளில் சுமார் 5000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருப்பதால் மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை பள்ளி மாணவர்களிடையே மேடைப்பேச்சு, விவாதம், படைப்புத் திறனை வளர்த்தல், குழு பணிகளைத் திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவ பண்பை வளர்க்கவும், சர்வதேச விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்தவும் ஒழுக்கம், சகிப்புத்தன்மை ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்கவும் பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் இளைஞர்கள் பாராளுமன்ற குழு அமைக்கப்படும்.
பள்ளிகளில் கற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேட்ஜ் வழங்கும் முறையும் மற்றும் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து மாணவர்களிடையே (சிவப்பு, ஊதா, பச்சை மற்றும் மஞ்சள்) பொறுமை ,தலைமைப் பண்பு, சரியான முடிவு எடுத்தல், சகிப்புத்தன்மை, குழுவாகப் பணி செய்தல் போன்ற பண்புகளை வளர்க்க வழிவகை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 20 பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உலகத்தின் எப்பகுதிக்குச் சென்றாலும் எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக பல பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளைக் காலதாமதமின்றி மேற்கொள்ள ஏதுவாக நடப்பு நிதியாண்டில் 16.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**