சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று(ஏப்ரல் 9) ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள 4.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 கம்பாக்டர் குப்பைத்தொட்டிகளுக்கு 32.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு மண்டலங்களில், தமிழக அரசால் 26 எண்ணிக்கையிலான நீரூற்றுகள் அமைக்கும் பணிக்கு ரூ.1.29 கோடி நிதி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மணலி , சாத்தாங்காடு குளம், சடையன் குப்பம் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம் ஆகியவற்றைப் புனரமைக்க இந்திய அரசின் அம்ருத் 2.0 திட்ட நிதியிலிருந்து 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நடப்பு நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியில் 3 டயாலிசிஸ் மையங்கள் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். மேலும் படிப்படியாக ஒவ்வொரு மண்டலங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
மாநகர மருத்துவமனை கட்டிடங்களில் மேற்கூரை கசிவுகளைச் சரிசெய்தல், கட்டுமான பணிகள், பராமரிப்பு மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் பழுதுபார்க்கும் பணிக்காக 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நடப்பு நிதி ஆண்டில் வீடற்றோர் காப்பகங்கள் கட்டுவதாகத் தீர்மானிக்கப்பட்டு அவை 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் பயன்பெறும் உள் மற்றும் புற நோயாளிகளின் எண்ணிக்கை பல்வேறு நிகழ்வுகள் மூலம் கூடுதலாக 10 சதவிகிதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து களப் பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் மனநலம் குன்றிய நிலையில் சுற்றித்திரியும் நபர்களைக் கண்டறிந்து அவர்களை மீட்டு தேவையான மருத்துவ மற்றும் புனரமைப்பு வசதிகளை அளிப்பதற்காக, இந்த சேவைகள் தொடர்புடைய மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு 16500 எண்ணிக்கையிலான நெகிழி குப்பைத்தொட்டிகள் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
**-பிரியா**