தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட 45 தனிப்படைகளை அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்ற சூழலில் நேற்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜனவரி 28ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப்பெறக் கடைசி நாள் பிப்ரவரி 7 ஆகும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
மேலும், மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சி,-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்.
மொத்தம் 12,838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தலுக்கு 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
1 .37 கோடி ஆண் வாக்காளர்களும், 1 .42 கோடி பெண் வாக்காளர்களும், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்த சூழலில், சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட 45 பறக்கும் படைகளைத் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 37 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணம், பொருட்களைப் பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்தால் உரிய ஆவணம் சமர்ப்பித்த பிறகு திருப்பி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அதுபோன்று சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற அனைத்து வார்டு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
**-பிரியா**
�,