lசென்னை மேற்கு மாசெ: உதயநிதியின் திட்டம்!

Published On:

| By Balaji

ஜெ. அன்பழகனை மாசெ ஆகக் கொண்டிருந்த சென்னை மேற்கு மாவட்ட திமுகவுக்கு அவரது மறைவை அடுத்து யாரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது திமுகவுக்குள் தற்போது தீவிர விவாதமாகியிருக்கிறது.

சென்னை மேற்கு மாவட்டம் என்பது திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயம் இருக்கும் பகுதிக்குள் வருகிறது. மேலும் மிக முக்கியமான வணிக ஏரியாக்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்துக்கு செயலாளர் ஆனால் வரவும் அதிகம், செலவும் அதிகம். வரவைக் கையாள வேண்டும்,செலவை எதிர்கொள்ள வேண்டும். இந்த இரு திறமைகளும் படைத்தவரைத்தான் மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமிக்க முடியும். அந்த வகையில் ஸ்டாலின் மிகவும் குழம்பியிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான கு.க. செல்வம், மற்றும் கலைராஜன் ஆகியோர் மாவட்ட பதவியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருமே அதிமுகவில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் அன்பழகன் இடத்தில் பாரம்பரிய திமுக காரனை நியமிப்பதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று ஸ்டாலினுக்கு சிலர் தகவல் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் யாரை மேற்கு மாவட்டத்துக்கு நியமிப்பது என்று ஸ்டாலின் கட்சியினருடன் இன்னும் வெளிப்படையாக ஆலோசிக்கவில்லை என்றாலும் அவரது வீட்டுக்குள் ஆலோசனைகள் ஆரம்பித்துவிட்டன.

இந்த நிலையில்தான் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி இதில் ஒரு திட்டத்தோடு நுழைந்திருக்கிறார். உதயநிதி இளைஞரணிச் செயலாளர் ஆனவுடன் நடந்த முதல் கூட்டத்திலேயே, ‘இளைஞரணிக்கு மாசெக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’ என்று பலர் புலம்பியிருக்கிறார்கள். அப்போது உதயநிதி, ’நாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம் செய்வோம்’ என்று குறிப்பிட்டார். அதாவது இளைஞரணியின் பொறுப்பாளர்களை மெல்ல மெல்ல மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் ஆக்குவதன் மூலம் கட்சியின் பேரன்ட் பாடியில் இளைஞரணிக்கு முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவது என்பதே அவரது திட்டம்.

ஏற்கனவே நாமக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் ராஜேஸ்குமார், அன்பில் மகேஷ் போன்றவர்கள் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னையிலும் தனக்கான ஒரு மாவட்டம் வேண்டும் என்று நினைக்கிறார் உதயநிதி.

அதனால் சென்னை மேற்கு மாவட்டத்துக்கு இளைஞரணி அல்லது மாணவர் அணியில் இருந்து ஒருவரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இளைஞர்களை கட்சிக்கு கொண்டுவர முடியும் என்று அவர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

எனினும் சவால்கள் நிறைந்த சென்னை மாவட்டப் பொறுப்பை ஸ்டாலின் இளைஞரணியிடம் கொடுப்பாரா என்பதும் ஒரு எதிர்ப்பார்ப்புக்குரிய விஷயமாகவே இருக்கிறது” என்கிறார்கள் சென்னை உடன்பிறப்புகள்.

**-வேந்தன்**

[சென்னை மேற்கு திமுக: அடுத்த மாசெ யார்?](https://minnambalam.com/politics/2020/06/12/12/next-chennai-west-ds-who-after-janbazhagan)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share