வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பா?: அதிகாரி விளக்கம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதற்கான எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதுபோன்றே மே 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் அல்லது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிற நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகிறது என்ற செய்தி சமூகவலைதளங்களில் பரவியது.

இதற்கு இன்று(ஏப்ரல் 27) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகிறது என்ற தகவல் உண்மையல்ல. வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதற்கான எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. திட்டமிட்டப்படி மே 2ஆம் தேதி நடக்கும்.

உயர் நீதிமன்ற பரிந்துரையின்படி, மே 1, 2ஆகிய தேதிகளில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று குற்றம்சாட்டியதையடுத்து, தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share