பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோமித்ரா எழுதிய ‘தி லூர்கிங் ஹைட்ரா’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் புத்தகத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம் என்றும் இது தீவிரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து இந்திய ராணுவம், புல்வாமா தாக்குதல், பிரதமர் மோடி பற்றிப் பேசிய அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறினார்.
இந்த அமைப்பு கிட்டத்தட்ட 60 முகமூடிகளை அணிந்திருக்கிறது. வேறு வேறு பெயர்களில் அதாவது மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கம் போன்று முகமூடி அணிந்து இயங்கி வருகிறது. மனித உரிமை அமைப்புகள் போலச் செயல்பட்டு ஆப்கானிஸ்தான் சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்குச் சண்டையிட ஆட்களை அனுப்பி வைக்கிறது. இதனை அரசியல் லாபத்திற்காக சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு என்று கூறினார்.
இஸ்லாமிய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் ஆளுநர் பேசியிருந்த நிலையில் அதற்குத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மாநில ஆளுநராக இருந்துகொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அயோத்தி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருந்து வைப்பது தான் அவரது பணியா. இந்துத்துவா கொள்கையைத் தூக்கிப் பிடிக்க நினைக்கும் ஆளுநரின் செயல் தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது.
தமிழகத்தில் அண்ணன், தம்பிகள், மாமன், மச்சான், அக்கா, தங்கை எனத் தொப்புள்கொடி உறவுகளாக இஸ்லாமியர்களும் இந்து சகோதரர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவில் விரிசல் ஏற்படுத்த நினைத்த மதவாத சக்திகளின் முயற்சி பலமுறை தோற்கடிக்கப்பட்டு உள்ளது.
அதே பாணியை ஆளுநர் மூலம் மத்திய அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால், தோல்வியை மட்டுமே தமிழக மக்கள் உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்கள்.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்று இப்போது தமிழக மக்களுக்குத் தெரியத் தொடங்கிவிட்டது. மாணவர்கள் மற்றும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பொது மேடையில் பேசியுள்ள ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், “கொரோனா காலத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழந்த இந்துக்களின் உடல்களை உறவினர்கள் கூட தொட மறுத்தபோது தங்கள் உயிரை துச்சமென நினைத்து உடல்களை அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்டவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோழர்கள். 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போதும் உணவு ,உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி உதவிய இந்த அமைப்பின் பணி குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி போன்றவர்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.
ஆளுநர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். எந்த விருப்பு வெறுப்பும் இன்றி நடுநிலையோடு செயல் படுவேன் என்று தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை ஆளுநர் மீறிவிட்டார். இனியும் அந்தப் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**