அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி நேற்று நள்ளிரவு விருதுநகருக்கு அழைத்துவரப்பட்டார்.
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தலைமறைவானார். இதையடுத்து 8 தனிப்படைகள் அமைத்து ராஜேந்திர பாலாஜியை போலீஸார் தேடி வந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் ஹாசன் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ராஜேந்திர பாலாஜி உட்பட கைதானவர்கள் அனைவரையும் ஹாசன் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதையடுத்து ஹாசன் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கவுடா உதவியுடன் கைதானவர்களைத் தனிப்படை போலீஸார் ஹாசன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவர்கள் விருதுநகருக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்படி அவர்கள் நள்ளிரவு 1.15 மணியளவில் விருதுநகருக்கு வந்தடைந்தனர். பின்னர் ராஜேந்திர பாலாஜியிடம் மதுரை சரக காவல் துறை டிஐஜி காமினி, மாவட்ட எஸ்பி மனோகரன் உள்ளிட்ட போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்குப் பின்னர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ராஜேந்திர பாலாஜி விருதுநகர் அழைத்து வரப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக நேற்று இரவு விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கோஷமிட்ட100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
**-பிரியா**
�,