சிஏஏ குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Balaji

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், “ குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

இன்று (பிப்ரவரி 18) சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பது ஏன்?” என்று கேட்டார்.

இதற்குக் குறுக்கிட்டு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்தச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படுகிறது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும்.

இந்த சட்டம் மத்திய அரசு இயற்றிய சட்டம். இதில் முடிவெடுக்க வேண்டிய, மாற்ற வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் மாநில அரசைக் கேட்பது ஏன்? எனவே இங்கே சட்டமன்றத்தில் இதுகுறித்து பேச வேண்டாம். தமிழக அரசு சிறுபான்மையினருக்கு இணக்கமான அரசு” என்று கூறியிருக்கிறார் முதல்வர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரின் சார்பிலும் சட்டமன்றச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் நேற்று, திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உடனே குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை விதி 173-ஐ சுட்டிக்காட்டி, ‘ஒரு கூட்டத் தொடரின்போது விவாதிக்க முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்ததோடு, “ சிஏஏ பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன், ‘சிஏஏ பற்றி விவாதமே நடத்தாமல் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன். சிஏஏ பற்றி விவாதிக்கவாவது அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். ஆனாலும், தன்னுடைய நிலைப்பாட்டில் சபாநாயகர் உறுதியாக இருந்தார்.

நேற்று சபாநாயகர் தீர்மானத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி சட்டமன்றத்திலே பேசவே வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share