ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கொடைக்கானலில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஓய்வு என்ற பெயரில் அங்கு சென்றாலும்… தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றிய தீவிர ஆலோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.
இதுகுறித்து [குடும்பத்தோடு கொடைக்கானல் டூர்: அமைச்சரவைப் பட்டியலை ரெடி செய்யும் ஸ்டாலின்](https://minnambalam.com/politics/2021/04/16/17/dmk-mkstalin-family-tour-to-kodaikanal-decide-cabinet-list)என்ற செய்தியில் வெளியிட்டிருந்தோம்.
தேர்தல் முடிவுகளில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று நம்பகமான கணிப்புகள் தரவுகளின் அடிப்படையில் திமுகவின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் என்பது குறித்து கொடைக்கானல் தாம்ரா ஹோட்டலில் தங்கியிருக்கும் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து திமுக தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.
“தன் தலைமையில் அமையப் போகும் அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் சில நிபந்தனைகளை கடுமையாக தனக்குத் தானே விதித்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அனைத்து செய்தித் தாள்களிலும் அதிமுக அரசு கொடுத்த செய்திகளைப் போன்ற விளம்பரத்தில் திமுகவினர் மீதான நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. பிரச்சாரம் முடிக்கும் நாளில் அந்த விளம்பரச் செய்திகளுக்கு பதில் சொல்லவே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் 2006 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கலைஞர் தலைமையின் கீழான அமைச்சரவையில் பணியாற்றிய சிலரும் இப்போது தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ,வ.வேலு,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, சுரேஷ்ராஜன் ஆகியோர் 2006 கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து இப்போதைய 2021 தேர்தலிலும் போட்டியிடக் கூடியவர்கள். திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் இவர்கள் அனைவருமே மீண்டும் தங்களுக்கு அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் ஸ்டாலின் இவர்களில் யார் யார் மீது என்னென வழக்குகள் இருக்கின்றன, அந்த வழக்குகளின் தன்மை எத்தகையது என்பது பற்றிய தீவிர ஆலோசனையில் இருக்கிறார். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 2006 அமைச்சர்களில் கணிசமானவர்கள் மற்றும் பெரும்பாலான புதுமுகங்களைக் கொண்டே அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் ஸ்டாலின்”என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,