நாடு முழுவதும் போராட்டத்தைக் கிளப்பிவிட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை அதிமுக ஆதரித்ததன் மூலமே நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர் இந்துக்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 16) ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதி வெளியிட்டிருக்கும் மடலில்,
“ஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாத அரசுகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, உயிரிழந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள், இந்து மதத்தையும் சைவ நெறியையும் சேர்ந்தவர்கள்தான். அவர்களுடன் தமிழ் முஸ்லிம்களும் சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கொடுமைக்குள்ளானார்கள்.
பாகிஸ்தான் – வங்கதேசம் – ஆப்கானிஸ்தானிலிருந்து அந்நாடுகளின் சிறுபான்மையினரான இந்துக்கள் இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெறலாம் என்கிற சட்டம் இயற்றியுள்ள பா.ஜ.க. அரசு, சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கொடுமைக்குள்ளாகும் இலங்கையின் சிறுபான்மையினரான ஈழத்தமிழ் இந்து – சைவ சமயத்தினருக்கு அந்த உரிமையை மறுப்பது ஏன்? இந்து மதத்திலும், தமிழர்கள் என்றால் புறக்கணிப்பதுதான் பா.ஜ.க.,வின் மதவாதக் கொள்கையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஸ்டாலின், மாநிலங்களவையில் அமித் ஷா தவறான தகவல் தந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, ‘இலங்கைத் தமிழர்கள் சுமார் 4 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதலில் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும்’ குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க தவறான தகவல்.
அவர் சொல்வது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வேலைக்குச் சென்ற வம்சாவளித் தமிழர்கள். அதாவது, இந்தியத் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அன்றைக்குப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அன்றைய இலங்கைப் பிரதமர் சிரிமாவோவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்ட குடியுரிமை ஆகும். சுமார் 5 லட்சம் பேருக்கு அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, இந்தியத் தமிழர்கள் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை தரப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வேலைக்காக – வாழ்வாதாரம் தேடி, இலங்கை சென்ற இந்தியத் தமிழர்கள்.
ஆனால் நாம் இப்போது குடியுரிமை கேட்பது; ஈழத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு. தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள், அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983-ஆம் ஆண்டு வந்தவர்கள் முதல், 2002-ஆம் ஆண்டு வந்தவர்கள் வரை இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் தங்கள் தாயகம் செல்ல முடியாத அவல நிலை இலங்கையில் தொடர்கிறது. அவர்களுக்கான குடியுரிமையைத்தான் கழகம் கேட்கிறது” என்று விளக்கியுள்ளார் ஸ்டாலின்.
இது தவிர, “புலம்பெயர்ந்து வந்திருக்கும் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டியது, நம் கலைஞர் அரசு. அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு, தமிழகத்தில் வசிக்கும் ரேசன் அட்டை தாரர்களுக்குத் தரப்படும் அனைத்துச் சலுகைகளும் ஈழத்தமிழர்களுக்கும் கிடைத்திடச் செய்தவர் கலைஞர். அவர்களுக்கான உதவித் தொகை வழங்கியவர் தலைவர் கலைஞர். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கும் பொருந்தும் என்று சொன்னவர் கலைஞர். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஈழத்தமிழ்க் குழந்தைகள் சேரலாம் என்று, இலவசக் கல்வி தந்தவர் கலைஞர் அவர்கள். உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்ததும் தலைவர் கலைஞர் ஆட்சிதான்.
அதற்கு நேர்மாறாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், ஈழத்தமிழ் மக்கள் தமிழகத்தில் அனுபவித்த துன்ப துயரங்கள் சொல்லி மாளாதவை. அவர் வழி வந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து, பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.�,