டெல்டாவில் பாதிப்பு: அமைச்சர் குழு அறிக்கை தாக்கல்!

Published On:

| By Balaji

வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேதங்களை ஆய்வுசெய்த அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு, தங்களின் அறிக்கையை இன்று(நவம்பர் 16) முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதீத கனமழை பெய்தது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல், பெரும்பாலான மாவட்டங்களில் விளைநிலங்களில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பயிர்கள் அனைத்தும் மூழ்கி அழுகிவிட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பயிர் சேத விவரங்களை அறியவும், பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.

நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர்கள் குழுவினர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு பணிகள் முடிவடைந்ததையடுத்து, அமைச்சர்கள் குழுவினர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் பாதிப்பு குறித்த அறிக்கையை அமைச்சர்கள் குழுவினர் இன்று(நவம்பர் 16) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பயிர் சேதம், வெள்ள நிவாரண உதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிகிறது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share