உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளா எனப்படும் புனித நீராடலை முன்னிட்டு, அந்த மாநிலத்தின் தலைமைச்செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாராட்டு தெரிவித்ததாக சர்ச்சைக்குரிய கடிதம் வெளியாகியுள்ளது.
இணையத்தில் பரவியிருந்த அந்த கடிதத்தை, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டதை அடுத்து, மேலும் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கும்பமேளாவை சிறப்பாக நடத்தியதற்காக உத்தராகண்ட் தலைமைச்செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் வாழ்த்தியிருக்கிறார்; வெட்கமே இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலைப் பரப்புமாறும் கேட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய அந்த ‘கடிதத்தில்’, கும்பமேளாவை நடத்தியதில் பல்வேறு அரசுத் துறைகளுடனும் குறிப்பாக போலீசுடனும் ஆர்.எஸ். எஸ். அமைப்புடனும் நல்ல ஒத்துழைப்பு நல்கியதாக தலைமைச்செயலாளர் ஓம் பிரகாசுக்கு தோவல் பாராட்டு தெரிவித்துள்ளார் என்று பதிவாகியுள்ளது.
வழக்கமாக நான்கு மாதங்கள் நடைபெறும் கும்பமேளாவானது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு 30 நாள்களாகக் குறைக்கப்பட்டது. நாசிக், ஹரித்துவார், பிரயாக்ராஜ்(அலகாபாத்), உஜ்ஜைனி ஆகிய இடங்களில் மாறிமாறி இந்த நிகழ்வு நடைபெறும். அந்த சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் ’புண்ணிய நதி’கள் எனப்படும் கங்கையில் புனித நீராடுவார்கள். எத்தனையோ கடுமையான விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தபோதும், கும்பமேளாவில் அதை கடைபிடித்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
அகாதாக்கள் எனப்படும் சாதுக்கள் பல பெருங்குழுக்களாக கங்கையாற்றின் கரையில் பத்தாயிரக்கணக்கில் திரண்டு மிகவும் நெருக்கமாக நிகழ்வில் பங்கேற்றனர். பெரும்பாலானவர்கள் முகக்கவசமோ கையுறையோ அணிந்திருக்கவில்லை. விதிகளை அமல்படுத்திய உத்தராகண்ட் அரசாங்கம் விதிமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை. கடந்த வாரம் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கும்பமேளாவில் திரண்டனர். சாதுக்கள் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் நீராடினர்.
இந்நிலையில் கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவிய தகவல் வெளியானதும், மத்தியப்பிரதேசம், டெல்லி, குஜராத் உள்பட்ட சில மாநிலங்கள் கும்பமேளாவிலிருந்து திரும்பிவந்தவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என அறிவித்தன. கும்பமேளா சென்றுவிட்டுத் திரும்பிய உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், வட இந்திய ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, சாதுக்களின் பெரிய குழுவான ஜூனாம் அகாதா தலைவருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அகாதாவின் சார்பில் கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கடிதம் என இணையத்தில் பரவ, ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. சில ஊடகங்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியதுடன், உண்மையறியும் முயற்சியிலும் ஈடுபட்டன. அதில்தான் சர்ச்சைக்குரிய அந்தக் கடிதம் உண்மை அல்ல எனத் தெரியவந்தது.
எப்படி திடீரென இப்படியொரு கடிதம் வந்தது என ஆராய்ந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டில் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது, அப்போதைய உத்தரப்பிரதேச தலைமைச்செயலாளர் ராஜேந்தர் குமார் திவாரிக்கு அஜித் தோவல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். நவம்பர் 28ஆம் தேதி என அந்தக் கடிதம் தேதியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைய கடிதமோ நேற்று முன் தினம் ஏப்ரல் 22 என தேதியிடப்பட்டிருக்கிறது. அத்துடன், உண்மையல்லாத அந்தக் கடிதத்தில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகளும் இடம்பெற்றுள்ளது பளிச்செனத் தெரிகிறது. நாட்டின் பாதுகாப்பு ஆலோசகருக்கே இப்படி சவால் விடுகிறார்களே, இவர்கள் யார், என்ன பின்னணி எனக் கண்டுபிடிக்க முடியாத அளவில் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
**அபிமன்யு**
.
�,”