கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்: கே.எஸ். அழகிரி

Published On:

| By Balaji

திமுகவுடனான கூட்டணிப்பேச்சுவார்த்தை தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று (மார்ச் 5) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “திமுகவினர் காங்கிரஸ் கட்சியையும் மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினரையும் மதிக்கவில்லை. அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கு நாம் சம்மதித்தால் நாளை காங்கிரஸ் கட்சியே இருக்காது” என்று பேசிய அழகிரி ஒரு கட்டத்தில் தேம்பித் தேம்பி அழுது கண்ணீர் விட்டார்.

இதுபற்றி மின்னம்பலத்தில் [அறிவாலயத்தில் நடந்தது என்ன? தேம்பித் தேம்பி அழுத அழகிரி](https://minnambalam.com/politics/2021/03/05/51/dmk-congress-allaiance-trouble-ksazhagiri-tears-in-sathyamoorthy-bavan) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று (மார்ச் 6) சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியிருக்கிறது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று, நாளை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும். இந்த நேர்காணலுக்குப் பின் திமுகவுடன் மீண்டும் பேசுவோம்” என்று கூறியவர்,

சத்தியமூர்த்தி பவனில் நேற்று அழுதுகொண்டே உரையாற்றியது பற்றி கேட்கப்பட்டபோது, “கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்”என்று முடித்துக் கொண்டார் அழகிரி.

இனி டெல்லி தலைமையிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில்தான் காங்கிரஸின் அடுத்த நகர்வுகள் இருக்கலாம் என்கிறார்கள் பவன் வட்டாரத்தில். இதனால் திமுக காங்கிரஸ் தேர்தல் பேச்சுவார்த்தை மேலும் தாமதமாகிறது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share