முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த விசிகவினருக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே அரியலூர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தனக்கு அழைப்பு வரவில்லை என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடலூரில் முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என விசிக மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகள் கடலூர் மாவட்டத்திற்குள் வருவதால், தொகுதி மக்களின் பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அழைப்பு விடுக்கப்படாதபட்சத்தில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருந்தனர்.
தகவல் அறிந்த திருமாவளவன், முதல்வருக்கு எதிராகப் போராட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, விசிக சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி நேற்று கடலூர் கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் முல்லை வேந்தன், “தலைவர் திருமாவளவன் ஆணையின் காரணமாக, நடைபெற இருந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். தோழர்கள் வேறு யாரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் முதல்வர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தடுத்து நிறுத்தப்பட்டார். மக்களின் பிரச்சினைகளை முதல்வருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வந்த தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி வெளியிலேயே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,