சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 68. நேற்று இரவு அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
1974ஆம் ஆண்டு பேட்ச், பிகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) படை, ரயில்வே பாதுகாப்புப் படைக்குத் தலைமை வகித்தவர். இதைத்தொடர்ந்து மத்திய புலனாய்வுப் பிரிவில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வந்த அவர், 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2013ல் சிபிஐ-ல் பொறுப்பில் சின்ஹா இருந்தபோது, ‘எஜமானார் பேச்சைக் கேட்கும் கூண்டுக் கிளி போன்று சிபிஐ செயல்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. சிபிஐ இயக்குநராகப் பதவி வகித்த காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். குறிப்பாக நிலக்கரி ஊழல் மற்றும் 2ஜி ஊழல் வழக்குகளில் ரஞ்சித் சின்ஹா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை ரகசியமாகச் சந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், 2017ஆம் ஆண்டு ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுடன் இவருக்கு கடும் மோதல் ஏற்பட்டது. முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார் ரஞ்சித் சின்கா.
இவ்வாறு இந்தியா முழுவதும் அறியப்பட்ட ரஞ்சித் சின்கா உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் காலமானார்.
**-பிரியா**
�,