முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நீதிமன்றத்தில் முறைகேடு வழக்கைத் தொடர்ந்த அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் நேற்று (ஜூன் 7) முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தது அறப்போர் இயக்கம்.
எஸ்.பி.வேலுமணி மட்டுமின்றி கே.சி.பி இன்ப்ரா நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த புகார் தொடர்பான தகவல்கள் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் அறப்போர் இயக்கம் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கே.சி.பி இன்ப்ரா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஆர்.சந்திரசேகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப்பட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், கூகுளிலும் உள்ள தகவல்கள் தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு அறப்போர் இயக்கம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தனி நீதிபதி முன்பு உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, “சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவிட்ட ஓராண்டுக்குள் வழக்கு தொடராமல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவதை இதுபோன்ற வழக்குகள் மூலம் தடுக்க நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்பு விசாரணையில் உள்ள இதுதொடர்பான மூன்று வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு குறித்து ஆறு வாரங்களில் கே.சி.பி இன்ப்ரா, ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
**-பிரியா**
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்குகளுக்குத் தடை!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel