gஎடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!

Published On:

| By Balaji

திமுக அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்திய நிலையில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. தேர்தல் சமயத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் முக்கியமானவற்றைக் கூட நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக அதிமுகவினர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து மலிவான அரசியல் ஈடுபடுகிறது என்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதே சமயத்தில் தங்கள் மீதான ஊழல் புகாரை மறைப்பதற்காகவும், மக்களைத் திசை திருப்புவதற்காகவும் அதிமுக போராட்டம் நடத்தியது என திமுகவினர் கூறுகின்றனர்.

முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, என்னாச்சசி என்னாச்சி!! தேர்தல் வாக்குறுதி என்னாச்சி ஸ்டாலின் அரசே!… நீட் தேர்வை ரத்து செய்யரேனு சொன்னது என்னாச்சி” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதுபோன்று போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தங்களது வீடுகளுக்கு முன்பு நின்று திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு விதிகள் மீறல் ஆகியவற்றுக்காக எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று மற்ற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share