ரஜினிகாந்த் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எழும்பூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
துக்ளக் பொன்விழாவில் தந்தை பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பெரியாரிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜனவரி 18ஆம் தேதி புகார் அளித்தார்.
அதில், “பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாமல், அவரின் நற்பெயருக்கு ரஜினிகாந்த் களங்கம் ஏற்படுத்துகிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. ஆகவே, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த புகாரின் மீது ஒரு மாதகாலம் ஆகியும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தபோது, “பெரியார் குறித்து ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் வரும் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். அன்று பதில் அளிக்கப்படும் பட்சத்தில் இரு தரப்பு வாதங்களையும் எடுத்துக்கொள்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
**எழில்**
�,