K
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்று விசாரணை நடந்து வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மோளையனூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் உயர் கல்வித் தறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஒன்றில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கார் முன்பு தீக்குளிக்க கே.பி.அன்பழகன் தன்னை தூண்டியதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
மற்றொரு மனுவில் கே.பி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாகப் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று (நவம்பர் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவ்வழக்கில் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இதை ஏற்று வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
**-பிரியா**
�,