டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளன்று மெரினாவில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது செருப்புகள் பறந்து சென்று விழுந்தன. இது தொடர்பாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் அமமுகவினர் சிலரை கைது செய்தனர் சென்னை போலீஸார்.
இது தொடர்பாக மின்னம்பலத்தில் [எடப்பாடிக்கு ஆதரவாக தமிழக போலீஸா?](https://minnambalam.com/politics/2021/12/10/36/merina-incident-edapadi-car-cheppal-police-arrest-ammk-ttv-dinakran-lrajendran)என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்,
அந்த செய்தியில் மெரினா செருப்பு வீச்சு சம்பவம் குறித்து அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் எல். ராஜேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தது பற்றியும்… கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் அற்புதராஜ், மதுசூதனன், சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டது பற்றியும் விரிவாக எழுதியிருந்தோம். தகவல் அறிந்து 9ஆம் தேதி காலையிலேயே டிடிவி தினகரனின் அறிக்கை வெளியிட அதையடுத்து அவர்களை உடனடியாக விட்டுவிட்டனர் போலீஸார்.
இந்தப் பின்னணியில் இன்று (டிசம்பர் 11) காலை டிடிவி தினகரனிடம் இருந்து துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு… அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் எல்.ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்ன தகவல் என்றால்…போலீசாரால் அதிரடியாக அதிகாலை கைது செய்து பின் விடுவிக்கப்பட்ட அந்த மூன்று வட்டச் செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று தினகரன் விரும்பியிருக்கிறார். இதையடுத்து உடனடியாக மாவட்டச் செயலாளர் மூலமாக காலை 11 மணிக்கு வட்டச் செயலாளர்கள் மூவரும் தினகரனை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள். துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன், மாவட்டச் செயலாளர் எல். ராஜேந்திரன் ஆகியோருடன் உடன் இருந்திருக்கிறார்கள்.
மெரினா செருப்பு வீச்சு தொடர்பாக போலீஸாரின் விசாரணை பற்றி நிர்வாகிகளிடம் அப்டேட் கேட்டறிந்த தினகரன், ‘இதை நாம் தைரியமாக எதிர்கொள்வோம்’ என்று கூறியிருக்கிறார். வட்டச் செயலாளர்களிடம் தைரியம் சொல்லியிருக்கிறார். ‘உங்க அறிக்கைக்குப் பிறகுதாண்ணே எங்களை விட்டாங்க’ என்று வட்டச் செயலாளர்கள் தினகரனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். தினகரன் தங்களை அழைப்பார் என்று எதிர்பார்த்திராத வட்டச் செயலாளர்கள் இந்த சந்திப்பால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
“கொரோனா ஊரடங்கு அதன் பிறகான காலங்களில் தினகரன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்தே சற்று தள்ளியிருப்பதாக கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் எழுந்தன. ஆனால் தினகரன் தற்போது திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். கட்சியினருடன் இனி நெருக்கமான தொடர்புகளை பேணுவதற்கு தினகரன் முடிவெடுத்துவிட்டார். அந்த அடிப்படையில்தான் கட்சிக்காக அதிகாலை 3 மணிக்கு போலீசாரால் வீடு புகுந்து இழுத்துச் செல்லப்பட்ட கட்சியின் வட்டச் செயலாளர்களை சந்திக்க விரும்பியிருக்கிறார், அதன் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. இனி தினகரன் நிர்வாகிகள், தொண்டர்களை அடிக்கடி சந்திப்பார்”என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,