சிறப்புக் கட்டுரை: அகமது பட்டேல் எடுக்கத்தவறிய 100 ரன்கள் !

politics

விவேக் கணநாதன்

காங்கிரஸைத் தாங்கிக் கொண்டிருந்த அடிவேர் ஒன்று நவம்பர் 25 ஆம் தேதி இறந்திருக்கிறது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு என ஆங்கில ஏடுகள் வர்ணிக்கும் அளவுக்கு மிக முக்கியமான இழப்பு இது.

நேருவுக்கு மத்தாய் இருந்ததைவிட, இந்திராவுக்கு ஆர்.கே.தவான் இருந்தைவிட முக்கியமானதோர் இடத்தில் சோனியா காங்கிரசில் இருந்தவர் அகமது பட்டேல்.

**வார்த்தைகளில் வழியும் வலி**

ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே பேர நடைமுறையாக மாறியுள்ள நிலையில், மேசைகளுக்கு கீழே நடக்கும் அசலான அரசியலை மிக லாவகமாக கையாளக்கூடிய அகமது பட்டேல் போன்ற ஒருவரின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு. பாஜகவுக்கு எதிரான களத்தில், காங்கிரஸுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

அகமது பட்டேலுக்கான இரங்கல் குறிப்பில் காங்கிரஸ் தலைவர்களிடம் அவ்வருத்தம் தெரிகிறது. ‘irreplaceable – மறு ஈடே இல்லாதவர்’ என்கிறார் சோனியா. ‘Tremendous asset – கட்சியின் மாபெரும் சொத்து’ என்கிறார் ராகுல். ‘இனி இப்படி ஒருவரை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்?’ என்கிறார் ப.சிதம்பரம்.

**குஜராத் குகையிலேயே…**

ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் வீழ்த்த முடியாத காங்கிரஸ் தளகர்த்தர் என அகமது பட்டேலை வர்ணிக்கலாம்.

2017 குஜராத் ராஜ்யசபா தேர்தலின்போது அகமது பட்டேலை வீழ்த்த பாஜகவின் ஒட்டுமொத்த மத்திய பேரதிகாரமும் வேலை செய்தபோதும், மோடி – அமித் ஷாவின் சொந்தமாநிலமான குஜராத்திலேயே அகமது பட்டேலை ஒன்றும் செய்யமுடியவில்லை.

2018ல் மீண்டும் பொருளாளராக பொறுப்பேற்றுக்கொண்ட அகமது பட்டேல்தான், 2019 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் பெற்ற மாநில வெற்றிகளுக்கு முக்கிய சூத்திரதாரி. அகமது பட்டேலின் தொடர்பு வெளிக்கு உட்பட்டு நடந்த ராஜஸ்தான், மகாராஷ்டிர ஆட்சி அமைப்பு பேரங்களில் பாஜக வீழ்த்தப்பட்டது; அவரின் தொடர்பு எல்லைக்கு அப்பால் நிகழ்ந்த மத்திய பிரதேச பேரத்தில் காங்கிரஸ் வீழ்ந்தது என் நிகழ்கால சாட்சியங்கள் ஒன்றே போதும், பட்டேல் காங்கிரஸுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்த.

**பிரதமராகும் வாய்ப்பு**

ஒரு இசுலாமியர் என்கிற அடிப்படையிலும், இந்திய அரசியலில் அகமது பட்டேல் வகித்த இடம் மிக மிக சுவாரசியமானது. பிரதமராக உருவெடுப்பதற்கு எல்லாவிதமான தகுதியும் இருந்தும், இசுலாமியர் என்கிற ஒரே காரணத்தால் பிரதமராக வாய்ப்புள்ளவர் பட்டியலில் கூட இடம்பெறாமல் போனவர் அவர். ஆனால், அதையே தனக்கான வலிமையாக மாற்றிக்கொண்டு கட்சியின் நரம்பு மண்டலத்தின் இயக்கவிசையாக தன்னை இறுத்திக் கொண்டவர் அவர். இனி ஒரு இசுலாமியர் அவ்வளவு உயரத்திற்கு செல்வது எளிதல்ல.

**பட்டேல்-மாறன்- யுகத்தின் முடிவு**

இவற்றைவிட முக்கியமானது, அகமது பட்டேலின் மரணத்தோடு காங்கிரஸில் ஒரு யுகம் முற்றாய் முடிகிறது. சோனியா காந்தியின் யுகம்.

இதுவரை நீடித்துவந்த ராகுல் காங்கிரஸ் vs சோனியா காங்கிரஸ் என்ற பனிப் போர் யுகத்தின் தலையாய பாறை கரைந்துவிட்டது என்றே அகமது பட்டேலின் மரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்

பட்டேலின் மரணத்துக்குப் பிறகான மாற்றங்களை, மாறனின் மரணத்துக்குப் பிறகு திமுகவில் நடந்த மாற்றங்களுக்கு நிகராக உற்றுக் கவனிக்க வேண்டும்.

மாறன் இருந்தவரை, மாவட்டச் செயலாளர்கள் முதல் திமுகவின் மிக உயர்ந்த தலைவர்கள் வரை, தாங்கள் என்னசொன்னாலும் மாறனின் இறுதி சொல்தான் கலைஞரிடம் எடுபடும் என்ற விமர்சனம் திமுகவுக்குள் இருந்தது. கூட்டணி முடிவுகள் முதல், திமுகவின் அமைச்சரவை பட்டியலை திருத்தும் அளவுக்கு சர்வ செல்வாக்கு கொண்ட ஒரு தலைவராக விளங்கியவர் மாறன்.

கலைஞர் தன் வாழ்நாளில் ஒருவருக்கு அளித்த அதிகபட்ச முக்கியத்துவமாக, ‘மாறன் என் மனசாட்சி’ என்ற சொற்கள் நிலைத்து நின்றன. கலைஞரையும், திமுகவையும் குறிப்பிட்ட முடிவுகளை எடுப்பதை நோக்கி அழுத்தி நகர்த்துவது மட்டுமல்ல, மிக முக்கியமான முடிவுகளைக்கூட ஒத்திப்போடவைக்கும், கைவிடவைக்கும் ஆற்றல் மாறனுக்கு இருந்தது.

கலைஞரின் மருமகன் என்ற உறவைத் தாண்டி, மாறனுக்கு இருந்த அரசியல் ஞானம், அவரது நுணுக்கமான தத்துவப் புரிதல், கள அரசியலை தத்துவக்கோவையிலிருந்து நழுவாமல் கையொழுகும் லாவகம், டெல்லி அரசியலுக்கான சூதாட்ட காய்களை நிர்வகிக்கத் தெரிந்த ராஜதந்திரம் போன்றவை கம்பீரமான பிம்பத்தையும், கட்சிக்குள் உயர்ந்த செல்வாக்கையும் அவருக்கு அளித்திருந்தது.

இத்தகைய ஓர் இடம், இந்திய ஜனநாயக மரபின் எதார்த்த சிக்கல்களுக்கு மத்தியில் ஓர் தலைமைத்துவத்தை காத்திரப்படுத்த மிக அவசியமாக தேவைப்படுகின்றன. மிகக்குறிப்பாக, மிக நீண்ட காலம் ஒரே தலைமையின் கீழ் செயல்படக்கூடிய இயக்கங்களில், லட்சியவாத பின்புலம் கொண்ட கட்சிகளிலும் இந்த இடம் மிக அவசியமானதாகிறது.

இந்தியாவின் மிக செல்வாக்கு வாய்ந்த தலைவரான நேருவுக்கே, அவர் கட்சிக்குள் மாற்றங்களை முன்னிறுத்த நம்பிக்கையும், விசுவாசமும் மிக்க ஒரு காமராஜ் தேவைப்பட்டார். ஆனால், நேரு – காமராஜ் உறவு நிகழ்ந்த காலகட்டம் என்பது லட்சியவாத உணர்வுகள் அரசியலில் தேய்ந்துவிடாத காலம். காலனிய ஆதிக்கம் மற்றும் சுதந்திரத்தின் தாக்கம் அகலாத காலம். எனவே, நேரடியாக அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்திக் காட்டக்கூடிய காமராஜ் போன்ற தலைமைகள் நேருவுக்கு கிடைத்தனர். இதற்கு பின்னர் வந்த காலக்கட்டங்களில் காமராஜ் போன்ற ஆளுமை உருவாக்கங்கள் நிகழவில்லை. மாறாக, தலைமைகளின் ‘சார்பாக’, ‘குரலாக’, ‘பதிலீடாக’ கட்சியை கண்காணிப்பு செய்யும் மேசை நிர்வாகிகள் அவசியமாகினர்.

இந்துத்துவ அரசியலுக்கேக்கூட, வாஜ்பாய்க்கு அத்வானியும், மோடிக்கு அமித் ஷாவும் தேவைப்பட்டனர். மோடி யுகத்தில் அமித் ஷா ஆற்றிவரும் அரசியல் பங்களிப்பை, நேரு காலத்தில் காமராஜ் ஆற்றிய பங்களிப்போடு ஒப்பிட்டு மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா ஒருகட்டுரையே எழுதினார். வெளிப்படைத்தன்மையான அதிகாரப் பகிர்தலோடு நடக்கும் இத்தகைய ‘No.2 அரசியல்’, No.1 ஆக இருக்கும் மோடியின் வெற்றிச் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. இந்த நிகழ்த்தல்தான், ‘தலைமைத்துவத்தை காத்திரப்படுத்தல்’.

நேருவுக்கு காமராஜ் கிடைத்த காலத்தில் காங்கிரஸுக்கு தேசியத்துவம் என்கிற வலுவான ஒரு தத்துவ அடித்தளம் இருந்தது. ஆனால், அந்த அடித்தளம் வலுவிழுந்த பிறகு, மேசை நிர்வகிப்பு மேலாண்மையாக No.2க்கான இடம் காங்கிரசில் மாற்றப்பட்டுவிட்டது. தத்துவ அடித்தளமிக்க பாஜகவில், இன்றைக்கும் நேரடியான அதிகாரப் பகிர்வோடு No.2-க்கான இடம் தொடர்கிறது.

இந்த அவசியமாதல் உறவின் மிகச்சிறந்த உதாரணமாக, கலைஞர் – மாறன் உறவைப் பார்க்கலாம். மாறன் மறைந்தபோது, ‘திமுகவின் மூளை’ என மாறனை பத்திரிகைகள் வர்ணித்தது முக்கியமானது.

மாறன் மறையும்வரை என்னென்ன விமர்சனங்கள் – பார்வைகள் மாறனின் இடம் மீது முன்வைக்கப்பட்டதோ, மாறன் மறைவுக்குப் பிறகு அதே விமர்சனங்களின் மூலகாரணங்களில் திமுக வழுக்கி விழுந்தது.

புதிய பண்பாட்டு மாற்றம் தரைதட்டி நின்றது. தலைமைக்கும் – நிர்வாகிகளுக்குமான ‘தகவல் தொடர்பு சிக்கல்கள்’ தலையெடுத்தன. இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீதான கட்டுப்பாட்டு லகானை செலுத்துவதற்கு கரமற்றுப்போனது. வரலாற்றின் வினோதமாக, மத்தியில் ஆட்சியில் பங்கில் இருக்கும்போதே திமுக டெல்லி அரசியலில் சறுக்கி விழுந்தது. மிகக்குறிப்பாக, கலைஞரின் தலைமைத்துவம் மீதான பிம்பம் குலைவைச் சந்தித்தது.

மாறன் இடத்தில் அகமது பட்டேலே முழுமையாக பொருத்திப் பார்க்க இடமில்லை. அதற்கு நிகர் புரிதலுக்காக, அகமது பட்டேலின் இடத்தை, திமுகவில் ஆற்காடு வீராசாமி வகித்த இடத்தோடு ஒப்பிடலாம். நேர்மையைவிட அதிகமான விசுவாசம், பேர அரசியலில் நிபுணத்துவம், கட்சியின் நரம்பு நாளங்கள் குறித்த ஆழமான அறிவு, மேலே இருந்து அடிமட்டத்தில் நிகழ்த்த வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் தூது தலைமை என சகல இடங்களையும் இட்டு நிரப்பியவர் அகமது பட்டேல். சாதி, சமூக அந்தஸ்து, வியாபார உலகோடான தொடர்பு என பல காரணிகளில் திமுகவுக்குள் ஆற்காடு வீராசாமியும், காங்கிரஸில் அகமது பட்டேலும் வகித்த இடங்கள் சமமானவை.

ஆனால், ஓர் இயக்கத்தின் தலைமைத்துவத்தை காத்திரப்படுத்தும் ஓர் இரண்டாம் கட்டத் தலைமை என்கிற நோக்கில், அகமது பட்டேலுக்கு பிறகான காங்கிரஸை, மாறனுக்கு பிறகான திமுகவோடே ஒப்பிட வேண்டும்.

அகமது பட்டேல் மீதும் ஏராளமான விமர்சனங்கள் இருக்கிறது. காங்கிரஸில் மாநிலத் தலைமைகள் வலுவிழந்தற்கும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் உருவாகாமல் போனதற்கும் அகமது பட்டேலின் ‘மேலிட விசுவாச கண்காணிப்பு அரசியல்’ முக்கிய காரணம் என்ற விமர்சனம் அதில் முக்கியமானது. ஆனால், அதில் அகமது பட்டேல் என்கிற தனிமனிதரைத் தாண்டி, கடந்த 100 ஆண்டுகளில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் இயக்க நசிவின் விளைவே அக்கண்காணிப்பு அரசியல் என்பதை உணரும்போது, அந்நசிவுக்கான விடையும் அகமது பட்டேல் வாழ்வில் இருக்கிறது.

**காங்கிரஸ் கிரிக்கெட்**

1980களில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடிய அகமது பட்டேல் 100 ரன்களை நெருங்கும் அளவுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார். எதிர்முனையில் விக்கெட் மாறுகிறது. அகமது பட்டேல் உடன் விளையாட குவாலியர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிந்தியா.

பட்டேல் 100 ரன்களை நெருங்கும் நேரத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றாமல், தானே விளையாடிக் கொண்டிருக்கிறார். தனக்கு அதிகமான பந்துகள் வராததால் விரக்தியடைந்த அரசர் சிந்தியா அகமது பட்டேலிடம் சென்று, ‘நீ ஆடியது போதும். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடு’ என எரிசொல் வீசுகிறார். அடுத்த பந்தில் வேண்டுமென்றே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் அகமது பட்டேல்.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஜோதிராவ் சிந்தியா பாஜகவில் இணைந்திருந்த நேரம். இந்த நிகழ்ச்சியைக் குறித்து அகமது பட்டேலிடம் மூத்த பத்திரிகையாளர் டி.கே.சிங் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

‘நீங்கள் அன்றைக்கு 100 ரன்கள் அடித்துவிட்டுத்தானே களத்தைவிட்டு சென்றிருக்க வேண்டும்’ என்ற டி.கே.சிங் கேள்விக்கு,

‘என்னை வெளியேறச் சொன்னது சிந்தியா. நானோ வெறும் சாமானியன்’ என பதில் அளித்திருந்தார்.

ராகுல் காங்கிரஸ் தேடிக்கொண்டிருக்கும் மாற்றத்திற்கான விடைகள், சோனியா காங்கிரஸின் தலைமைத் தளபதியான அகமது பட்டேலின் விடைக்குள் தான் இருக்கின்றது

**கட்டுரையாளர் குறிப்பு:**

விவேக் கணநாதன் ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர், சாதி, மதம், பண்பாடு, சினிமா, மானுட உளவியல் சித்தாந்தங்கள் குறித்து எழுதிவருகிறார்.

தொடர்புக்கு: writetovivekk@gmail.com

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *