குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. எனினும், சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 18) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக எவ்வகையிலான போராட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு அண்ணா அறிவாலய வளாகத்தில் அனைத்து தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மிகப்பெரிய பேரணியை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். எங்களுடைய போராட்டம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் தலைவர்களை அழைத்துபேசி முடிவு செய்வோம். நாட்டின் அமைதியை குலைக்கக் கூடிய வகையிலும், குழிபறிக்கக் கூடிய வகையிலும் இந்த சட்டம் அமைந்துள்ளது. அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் மதத்தினரில் இஸ்லாமியர்களை தவிர்த்திருப்பது ஏன் என்பதுதான் எங்களின் இரண்டு கேள்விகள்.
அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் 1 உறுப்பினரும் வாக்களித்த காரணத்தால்தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழின துரோகிகளாக அவர்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
இம்மசோதாவால் ஒரு இந்தியர் கூட பாதிக்கப்படமாட்டார் என முதல்வர் கூறியிருக்கிறாரே என்ற ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “பிரதமர் மோடியோ அல்லது மத்திய அரசோ சொல்லக்கூடியதை அப்படியே அடிபணிந்து காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அதிமுகவினர். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி சொல்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை” என்று சாடினார்.
கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என்று கமல்ஹாசன் கூறினாரே, அழைப்பு ஏதும் விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக அவர் என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகளின் தலைவர்களைத்தான் அழைத்திருக்கிறோம் என்று அவரிடம் தெளிவாகச் சொன்னேன். தேவைப்பட்டால் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகள், அமைப்புகளையும் அழைத்து கூட்டம் நடத்தும்போது அவர் அழைக்கப்படுவார். சென்னையில் நடைபெறும் பேரணியில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.
�,