சிஏஏவுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்கள் சென்னையிலிருந்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கையெழுத்துக்களைப் பெற்றுவந்தனர். கையெழுத்துக்களைப் பெறும் பணி சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மொத்தம் 4,11,363 படிவங்களில் 2,05,66,082 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கையெழுத்துப் படிவங்களை டெல்லிக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 16) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், தி.க தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதில் கலந்துகொண்டனர்.
வரும் 19ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அனைத்துத் தரப்பு மக்களிடமும் 2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கையெழுத்து பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார்கள்.
மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) – தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து – இப்போதாவது மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றும் – என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, மேதகு குடியரசுத் தலைவர் ஜனநாயகத்தையும் – அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அறிவுரையை வழங்கிடுவார் என்று தமிழகமே ஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.�,