”தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தால் இதுவரை யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள்” என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கேட்டார்.
அவருக்கு நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து ஜமாத்துகளின் சார்பில் பிப்ரவரி 25 ஆம் தேதி, நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்பி பதில் கூறியுள்ளார். அதில் சிஏஏவை பெட்ரோலோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார் கனிமொழி.
“நமது முதலமைச்சர் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். குடியுரிமை சட்டத்தால் இதுவரை யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்டிருக்கிறார். உங்கள் வழியாக அவருக்கு ஒரு விளக்கத்தை கொடுக்க நான் விரும்புகிறேன். சிஏஏ என்பதை தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். பெட்ரோல் இருக்கிறது. அந்த பெட்ரோலை அப்படியே வைத்திருந்தால் ஒன்றுமில்லை. அந்த பெட்ரோலை நாளை வீட்டு மீது ஊற்றாதே.. நாளை வீடு பற்றிக்கொள்ளும் என்று நாம் சொல்கிறோம். முதலமைச்சர் என்ன சொல்கிறார்… இதுவரைக்கும் ஏதாவது வீடு எரிந்திருக்கிறதா, அதனால நான் ஊத்துறேன் என்கிறார்.
சிஏஏ என்பது பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வரக் கூடிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை தருவோம் என்று சொல்கிறது சட்டம். இதுவே அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நாம் எந்த அரசியல் அமைப்பு சட்டத்தை எதை முக்கியமான புத்தகமாக மதிக்கிறோமோ அதற்கு எதிரானது. ஏனென்றால் சாதி, மத, பாலின பேதம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தால் ஏற்கப்படவில்லை. எனவே எதன் மீது இந்த நாடு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதோ அதற்கு எதிரானது இந்த சட்டம்.
அடுத்து மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்போது சில சந்தேகங்கள். அந்த சந்தேகங்கள் உண்மையான சந்தேகங்களாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் மேல் சந்தேகங்கள் வரலாம். மேடையில் இருக்கும் அனைவருக்கும் குடியுரிமை இருக்கிறது என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களுக்கெல்லாம் குடியுரிமை சந்தேகத்துக்குரியது என்று அவர்களால் எழுத முடியும். அடுத்து அந்த குடிமக்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இதுவரை அரசாங்கத்திடம் இருந்தது. இப்போது அந்த கடப்பாடு நம் மீது சுமத்தப்படுகிறது. நம் மீது சந்தேகம் வரும்போது, இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று நாம்தான் உறுதி செய்ய வேண்டும். அதற்குத்தான் உங்கள் அப்பா யாரு, தாத்தா யார், தாத்தாவின் அப்பா யார், நிலம் இருக்கிறதா, சான்று இருக்கா என்று பல கேள்விகள்.
ஒரு ரேஷன் கார்டுக்கு கூட எத்தனை முறை அலைக்கழிக்கப்படுகிறோம் என்று நமக்குத் தெரியும். அதனால் அதிகாரிகள் நினைத்தால் நாம் கொடுக்கும் எந்த சான்றையும் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்கள் கையில். இப்போது இதில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்று முதலமைச்சர் பதில் சொல்லட்டும்” என்று பேசியிருக்கிறார் கனிமொழி.
**-வேந்தன்**�,