சிஏஏவால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் சிஏஏவுக்கு ஆதரவான பேரணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் நேற்று சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டத்தில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ‘சிஏஏவால் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். குடியுரிமை வழங்கத்தான் சிஏஏ கொண்டுவரப்பட்டதே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல. எதிர்க்கட்சிகள் சிறுபான்மையின மக்களை பதற்றத்தில் வைத்துள்ளன’ என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று (மார்ச் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஏஏவால் சிறுபான்மையினர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். அது சரியாக இருந்தால் சிஏஏவால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “சிஏஏ அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் பயனளிக்கும் என்றால், சட்டத்திலுள்ள சிறுபான்மையினர் பட்டியலில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
**எழில்**
�,