{சட்டம் ஒழுங்கைக் கெடுக்க ஒரு சட்டம்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தால் நாடே பற்றி எரிவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு, படைப்புகள், வரலாறு, நினைவுகள் ஆகியவற்றை ‘அண்ணா அறிவுக்கொடை’ என்ற பெயரில் தமிழ்மண் பதிப்பகம் 110 தொகுதிகளாக வெளியிடுகிறது. முதற்கட்டமாக 64 தொகுதிகள் வெளியிடும் விழா நேற்று (டிசம்பர் 21) சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.

இறுதியாக மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். ‘அண்ணா அறிவுக்கொடை’ நூலின் 64 தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் விஸ்வநாதன், எழுத்தாளர் செந்தலை கவுதமன், ஈரோடு தமிழன்பன், தமிழ்மண் பதிப்பகத்தின் கோ.இளவழகனார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நூல் வெளியிட்ட பிறகு உரையாற்றிய ஸ்டாலின், “அண்ணாவின் தேவை அன்றோடு முடிந்துவிடவில்லை. இன்றும் அவர் தேவைப்படுகிறார். அண்ணா இருந்த காலத்தைவிட தற்போது தமிழர்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிட்டனர். அதற்குக் காரணம் தமிழர்கள் படித்துவிட்டார்கள், உயர்ந்த பதவிகளுக்கு வந்துவிட்டார்கள், அனைத்துக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறார்கள் என்ற வன்மம் எதிரிகளுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக, ஈழத் தமிழர்கள் குடியுரிமையைக் கவனத்தில் கொள்ளாமல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கு இதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் பேரணியில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

மேலும், “நாட்டில் அமைதியை ஏற்படுத்த சட்டங்களைக் கொண்டுவருவார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படுகிறதா? இந்த விஷயத்தில் அதிமுக, பாமக செய்துள்ள துரோகம் சாதாரணமானதா?. கடைந்தெடுத்த பச்சை துரோகம்” என்றும் விமர்சித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share