}’கோ பேக்’: ஆளுநரை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Balaji

கேரள சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த ஆளுநரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை திரும்பப் பெற வேண்டுமென இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள சட்டமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தீர்மானம் நிறைவேற்றியது. அத்தோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. இந்தத் தீர்மானம் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வாசகத்தை படிக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 28) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அவைக்கு ஆளுநர் வருகை தந்ததும் அவரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் , ‘கோ பேக்’ முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் “இந்திய மக்கள் சிஏஏவை எதிர்க்கிறார்கள், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். இதனால் மேற்கொண்டு ஆளுநரால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, ஆளுநர் புன்னகைத்தபடியே அமைதியாகக் காத்திருந்தார். நிலைமையை உணர்ந்த அவைக் காவலர்கள் ஆளுநரை சுற்றி அரண் அமைத்து, இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு, ஆளுநர் உரையாற்றத் துவங்கியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டு சட்டமன்ற வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில், சிஏஏ எதிர்ப்பு வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. அதனை வாசிப்பதற்கு முன்பாக ஆளுநர் ஆரிப் முகமது, “இதனை நான் படிக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதால் இந்த பாராவை நான் படிக்கப் போகிறேன். இந்த கருத்தில் உடன்பாடில்லை. இது அரசாங்கத்தின் பார்வை என்று முதல்வர் கூறுகிறார். அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக நான் இந்த பாராவை படிக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டு வாசிக்கத் தொடங்கினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel