�சிஏஏ: முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

சிஏஏ சட்டம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய அமைப்புகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

தமிழகம் முழுதும் சிஏஏ, என்.ஆர்.சி. என்பிஆர் எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் சட்டமன்றத்தில் மார்ச் 12 ஆம் தேதி அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்புக்குப் பின் தமிழகம் எங்கும் நடக்கும் ஷாஹின் பாக் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் வங்கிகளில் இருக்கும் தங்கள் டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டங்களும் தற்போது பரவி வருகிறது.

இதற்கிடையே இஸ்லாமிய கூட்டமைப்பினர், எஸ்டிபிஐ கட்சியின் பிரநிதிகள், வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினர் என்று தனித்தனியாக தன் இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 12) மாலை காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அறக்கட்டளை தலைவர் அரசு தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் முகமது அய்யூப், தாவூத் மியாகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது சிஏஏ, என்பிஆர், என் ஆர் சி குறித்த நீண்ட விவாதம் நடைபெற்றது. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு என் பிஆர் தொடங்கப்படாது என்று முதல்வர் உறுதியளித்ததோடு, தங்கள் கடிதத்திற்கு விளக்கம் மத்திய அரசிடமிருந்து பெற்ற பின் அடுத்த கட்ட முடிவெடுப்பதாக கூறினார்.

இந்த ஆலோசனை முடிந்த அடுத்த நாளான இன்று (மார்ச் 13) தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் சிஏஏ குறித்து இஸ்லாமிய தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 14 மாலை தலைமைச் செயலகத்தில் நடப்பதாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்புக்கு பதில் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான காதர் மொய்தீன் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,

“தங்களின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு முஸ்லிம் சமுதாய தலைவர்களை மட்டுமே அழைத்திருப்பது இப்பிரச்சினை முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியதே என்று கருதப்படும் சூழலை உருவாக்கும், மேலும் தமிழக முதல்வர் தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும்” என்றும் காதர் மொய்தீன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share