சிஏஏவுக்கு எதிராக நடந்த பேரணி தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 8,000 பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் நேற்று (டிசம்பர் 23) பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து-நடராசனார் மாளிகையில் ஆரம்பித்து ராஜரத்தினம் மைதானம் வரை நடந்த பேரணியில் ஸ்டாலின், கி.வீரமணி, ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 90 அமைப்புகளைச் சேர்ந்த 40, 000 பேர் வரை கலந்துகொண்ட நிலையில், ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படாமல் பேரணி நிறைவுற்றது.
இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீதும், அதில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடப்படாத 8,000 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைவரின் மீதும் பிரிவு ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 188 (அரசு உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தல்), 341 (முறையற்ற முறையில் செயல்பட விடாமல் தடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளனர்.�,