பிறப்புச் சான்றிதழ் இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சந்தேகக் குடிமகன்தான் என ஜவாஹிருல்லா விமர்சனம் செய்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 19) சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னை வாலாஜா சாலையில் கூடிய பல்லாயிரக்கணக்கானோர், கலைவாணர் அரங்கத்திலிருந்து சட்டமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பேரிகார்டு அமைத்து, அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, அங்கு லாரியில் அமைக்கப்பட்டிருந்த மேடை மூலம் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, ‘சிஏஏவால் தமிழ்நாட்டில் வாழும் யாராவது ஒருவருக்கு பாதிப்பு என காண்பியுங்கள். நான் பதில் சொல்கிறேன்’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
“மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தற்போது மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. 1950களிலிருந்து இந்தியாவில் இருந்தது மதச்சார்பற்ற அரசு. அப்போது பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்குமானால், சிஏஏ அப்போதே வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?
இலங்கை நாட்டின் கண்டியில் பிறந்த அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தமிழகத்தில் வாழ்ந்திருக்க முடியாது. இந்தியராகவே ஆகியிருக்க முடியாது. அதிமுகவையும் நிறுவியிருக்க முடியாது. முதல்வர் பழனிசாமியான நீங்கள் புளிமண்டியில் அமர்ந்துகொண்டிருப்பீர்கள். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் டீ ஆற்றிக்கொண்டிருப்பார்” என்று காட்டமாக விமர்சித்த ஜவாஹிருல்லா,
“முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தபோது என்பிஆர் தொடர்பாக மத்திய அரசு படிவத்தை அவரிடம் காட்டினேன். என்னிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று கூறினேன். ‘என்னிடம் மட்டும் இருக்காக்கும்’ என்று அப்போது கூறிய முதல்வர், பள்ளிச் சான்றிதழ்தான் பிறப்புச் சான்றிதழ் என்று கூறினார். நம்முடைய நிலைமையே இப்படி என்றால் நம்முடைய பெற்றோர் பிறந்த தேதியையும், பிறந்த இடத்தையும் கேட்கிறார்களே என்றேன். ‘அம்மாடி இதை யாரு கொடுக்க முடியும்னு’ எங்களிடம் கேட்ட எடப்பாடி பழனிசாமியே, நீங்களும் சந்தேகக் குடிமகன்தான்” என்று கடுமையாகச் சாடினார்.
மேலும், “2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது போல, தமிழர்களையும் இந்தியர்களையும் செல்லாக் குடிமக்கள் ஆக்கக் கூடிய திட்டம்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி” என்றும் விமர்சித்தார்.
தலைவர்கள் பேசி முடித்த பிறகு தேசிய கீதம் இசைக்கப் பெற 12.30 மணியளவில் முற்றுகைப் போராட்டம் நிறைவடைந்தது.
**-த.எழிலரசன்**
�,