தமிழக மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளைய வட்டம், கோவிந்தம்பாளையம் கிராமம், ஆலம்பாளையம் பகுதியில், பழைய இரண்டு அடுக்கு மாடி வீட்டில் கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
தற்போது பள்ளிபாளையம் திமுக ஒன்றிய செயலாளராக இருக்கும் யுவராஜிடம் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக ரூ.20 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு தங்கமணி ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், 2006ல் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தங்கமணிக்கு சீட் கிடைத்ததும் யுவராஜுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சமரசமானதால் வழக்கைப் வாபஸ் பெற்றார் யுவராஜ்.
15 வருடங்களுக்கு முன்பு 20 லட்சம் கடன் வாங்கி திரும்பிக் கொடுக்க முடியாமல் தவித்த தங்கமணிக்கு இன்று ஆட்டோ லூம், டையிங் (நூலுக்கு கலர் ஏற்றுவது), காற்றாலைகள் மற்றும் கல் குவாரிகள் உள்ளன. அதோடு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கோடிகளில் முதலீடு செய்துள்ளனர் தங்கமணி குடும்பத்தினர்.
அதுமட்டுமின்றி தங்கமணி மகன் தரணிதரன் கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளார். இந்த அனைத்து விவரங்களையும் விஜிலன்ஸ் போலீசார் எடுத்து வைத்துக்கொண்டு நேற்று (டிசம்பர் 14) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதன் நகலை ஒரு மணி நேரத்திற்குள் நாமக்கல் முதன்மை மேஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பித்தனர். இந்தச்சூழலில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
**சென்னையில் 14 இடங்களில் சோதனை**
தற்போது குமாரபாளையம் எம்.எல்.ஏ.வாக உள்ள தங்கமணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அறையிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் ஜே பத்திரிகையாளர் போலீசாரால் தாக்கப்பட்டதாகக் கூறி அங்குத் திரண்டிருந்த அதிமுகவினர் ‘போலீஸ் அராஜகம்’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் அருகில் உள்ள அக்கரையில் தங்கமணிக்குச் சொந்தமாகப் பண்ணை வீடு உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் தங்கமணி ஆதரவாளர்கள் அங்குக் குவிந்தனர். இதையடுத்து பேரிகார்டுகள் வைத்து போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது.
நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள பி.எஸ்.டி. இன்ஜினீயரிங் கட்டுமான நிறுவனம், மதுரவாயல் திருகுமரன் நகர் 2ஆவது மெயின் ரோட்டில் உள்ள தருண் கட்டுமான நிறுவனம், கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் சாலை, அண்ணா நகர் என சென்னையில் 14 இடங்களில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சேலத்தில் தங்கமணிக்குத் தொடர்புடைய நான்கு இடங்களில் சோதனை நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள, தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது, அதிமுக தெற்கு தொகுதி எம்எல்ஏ பலசுப்பிரமணியம், அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினர், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு எதிராகவும், திமுக அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
நாமக்கல்லில் வசித்து வரும் அரசு ஒப்பந்ததாரரான சத்தியமூர்த்தி என்பவரது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இவர் தங்கமணிக்கு நெருக்கமானவர் என லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோட்டில், பாரி வீதி , பண்ணை நகர், பண்ணை வீதி, கணபதி நகர், முனியப்பன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சோதனை நடந்தது. கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தங்கமணியின் உறவினர் வசந்தி என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல் பள்ளிபாளையம் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் செந்தில் வீட்டிலும் சோதனை நடந்தது. தங்கமணியின் பினாமியான இவரது பெயரிலும் அதிகளவு சொத்து சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தங்கமணியின் ஆதரவாளரான பள்ளிப்பாளையம் அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவர் முன்னதாக கைதறி வேலைக்கு 500 ரூபாய் கூலிக்குச் சென்று வந்தவர் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
நாமக்கல்லில் ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீடு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்கிற சுப்பிரமணியம் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை முடிந்து முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அப்போது அவரது வீடு முன்பு குவிந்திருந்த தங்கமணி ஆதரவாளர்கள், அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்று ஆந்திர மாநிலம் சித்தூர், கர்நாடகாவிலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நிறைவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக 4,86,72,019 ரூபாய் சொத்து சேர்த்ததாக நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில், குற்ற எண் 8/2021, ஊழல் தடுப்புச் சட்டம் 1988 u/s 13(2), r/w 13(1)(e) மற்றும் ஐபிசி109 & 12, ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் 2018 13(2) r/w 13(1) (b)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களிலும், சென்னையில் 14 இடங்களிலும், ஈரோட்டில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், கரூரில் 2 இடங்களிலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூரில் தலா ஒரு இடத்திலும் பெங்களூருவில் இரண்டு இடத்திலும், ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையிலிருந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,