yசிபிஎஸ்இ கேள்வி – மன்னிப்பு கேளுங்கள்: சோனியா

Published On:

| By Balaji

சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் பிரிவு ’ஏ’ பகுதியில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்றுக் கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் ” இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெமினிசம்தான் காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று தங்களுக்கென அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். பெண்களின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தபோது, இதுபோன்று நடக்கவில்லை. தற்போது அதுபோன்று நடக்காததால், குழந்தைகள் ஒழுங்கீனமாக வளர்கிறார்கள். கணவனின் பேச்சை கேட்டு நடந்தால்தான் குழந்தைகள் கீழ்படிதலை கற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுபோக என்ன காரணம்? வீட்டில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கான இடம்? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இயின் இந்த சர்ச்சையான கேள்வி ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைதனத்தையும் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று(டிசம்பர் 13) மக்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,” சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். வினாத்தாளில் கேள்வி எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய கேள்வித்தாளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில், “சிபிஎஸ்இயின் பெரும்பாலான கேள்விக்கள் மிகக் கடினமாக இருந்தது. அதிலும் ஆங்கிலப் பாடத்தில் படித்து புரிந்துகொண்டபின் பதிலளிக்கும் பகுதி முற்றிலும் அருவருப்பாக இருந்தது. இது இளைஞர்களின் மன உறுதியையும், எதிர்காலத்தையும் நசுக்க திட்டமிடும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் சூழ்ச்சியாகும். குழந்தைகளே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். கடின உழைப்பு பலன் தரும், மதவெறி இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கரூர் எம்.பி ஜோதிமணி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமமும பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் அந்தக் கேள்வியை எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் முழு மதிப்பெண் அளிக்கப்படும். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வு வினாத்தாள், விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய பாடத்திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

முன்னதாக சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் வன்முறை குறித்து சர்ச்சையான கேள்வி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share